ஷார்ஜா நகரில் ஓட்டுநராக பணியாற்றி வரும் இந்தியர் விபீஷ் பள்ளியாலிக்கு பல ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் அதிர்ஷ்டம் கைகொடுத்துள்ளது. அவர் வாங்கிய பரிசுச்சீட்டின் மூலம் ரூ.10 கோடி பரிசு கிடைத்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) கடந்த 15 ஆண்டுகளாக பிக்கப் டிரைவராகப் பணியாற்றி வரும் விபீஷ் பள்ளியாலி என்ற இந்தியருக்கு அபுதாபி ‘பிக் டிக்கெட்’ (Big Ticket) குலுக்கலில் 15 மில்லியன் திர்ஹம் (சுமார் 37 கோடி ரூபாய்) பரிசு விழுந்துள்ளது.

விபீஸ் கடந்த 15 ஆண்டுகளாக தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை வாங்கி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த நீண்ட காலத்தில் ஒருமுறையும் பரிசு கிடைக்கவில்லை. இருந்தாலும் அதிர்ஷ்டம் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் அவர் ஒவ்வொரு மாதமும் தனது சம்பளத்தில் ஒரு பகுதியை லாட்டரி சீட்டுகளுக்காக செலவழித்து வந்தார். இதனால் வீட்டில் மனைவியிடம் அடிக்கடி கண்டிப்பும் கேட்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், சமீபத்தில் தனது நண்பர்கள் இருவர் மற்றும் ஒரு உறவினருடன் சேர்ந்து கூட்டாக ஒரு லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். சில நாட்களுக்கு முன்பு லாட்டரி நிறுவனத்திலிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தபோது, வழக்கம்போல் புதிய சீட்டு வாங்க அழைக்கிறார்கள் என முதலில் நினைத்துள்ளார்.
ஆனால் அவர் வாங்கியிருந்த கூட்டுப் பரிசுச்சீட்டுக்கு பெரிய தொகை பரிசு கிடைத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டபோது விபீஸ் ஆச்சரியத்திலும் மகிழ்ச்சியிலும் திக்குமுக்காடி போயுள்ளார்.
இந்த லாட்டரி சீட்டு கூட்டாக வாங்கப்பட்டதால், பரிசுத் தொகையில் விபீஸின் பங்காக சுமார் ரூ.10 கோடி கிடைக்கும் என கூறப்படுகிறது. இந்த பணத்தை கொண்டு விரைவில் இந்தியா திரும்பி, பெங்களூரில் படித்து வரும் தனது மகள் வந்தனா பெயரில் ஒரு சொத்து வாங்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
