சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி குறித்து மேடையில் நெகிழ்ச்சியுடன் பேசியது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ள திரைப்படம் ‘தாய் கிழவி’. கடந்த பிப்ரவரி 27-ம் தேதி வெளியான இப்படம், கிராமத்து பின்னணியில் பெண்களின் சேமிப்பு மற்றும் குடும்ப நிர்வாகத்தின் முக்கியத்துவத்தைப் பேசியிருந்தது. இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டம் நேற்று சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
மனைவியின் பங்களிப்பு குறித்து நெகிழ்ச்சி
இந்த விழாவில் பேசிய சிவகார்த்திகேயன், படத்தின் கருப்பொருளான பெண்களின் பொருளாதார மேலாண்மை குறித்துப் பேசும்போது தனது சொந்த வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.
”சினிமாவிற்குள் நான் நுழைந்த முதல் நாளில் இருந்தே, எனது அனைத்து நிதி விவகாரங்களையும் (Finances) கவனித்துக் கொள்வது எனது மனைவி ஆர்த்திதான். உண்மையச் சொல்லப்போனால், எனது வங்கிக் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. இன்று நான் ஒரு தயாரிப்பாளராக உயர்ந்து நிற்கிறேன் என்றால் அதற்கு ஆர்த்திதான் முக்கிய காரணம்.”
தொடர்ந்து பேசிய அவர், தனக்குத் தேவையான செலவுகளுக்குக் கூட மனைவியிடம்தான் பணம் கேட்பேன் என்றும், தனது தயாரிப்பு நிறுவனத்தின் வரவு செலவுகளை அவர் மிகத் துல்லியமாக நிர்வகித்து வருவதாகவும் பாராட்டிப் பேசினார். மேடையில் சிவகார்த்திகேயன் தனது மனைவிக்கு அளித்த இந்த அங்கீகாரம் அங்கிருந்தவர்களிடையே பலத்த கைதட்டலைப் பெற்றது.
இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் உருவான ‘தாய் கிழவி’ திரைப்படம், குடும்பங்கள் கொண்டாடும் படமாக மாறியுள்ளது. இந்த விழாவில் நடிகை ராதிகா சரத்குமார், சிங்கம் புலி உள்ளிட்ட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு தங்கள் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
சமீபத்தில் ஒரு முன்னணி நடிகரின் மனைவி குறித்த விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், சிவகார்த்திகேயன் தனது மனைவியைப் புகழ்ந்து பேசிய இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சட்டப்பூர்வமாக விவாகரத்து.. கணவரை பிரிந்தார் நடிகை ஹன்சிகா..!
