சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தொல். திருமாவளவன், இந்த முறை வாக்கு சதவீதத்தில் பெரிதாக எதுவும் மாறவில்லை என்றும், திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என திருமாவளவன் நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவு வழக்கமான அளவிலேயே உள்ளதாக அவர் தெரிவித்தார். இந்த முறை வாக்கு சதவீதத்தில் பெரிதாக மாற்றம் எதுவும் இல்லை. இதில் ஆச்சரியப்பட வேண்டியதில்லை, என்றார். மேலும், சிறப்பு திருத்தத்தின் மூலம் லட்சக்கணக்கான வாக்குகள் நீக்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அவை நீக்கப்படாமல் இருந்திருந்தால், வாக்குப்பதிவு பழைய நிலைபோலவே இருந்திருக்கும் என்றும் கூறினார். ஒவ்வொரு ஐந்து ஆண்டுகளுக்கும் சுமார் 20 லட்சம் புதிய வாக்காளர்கள் சேருவது வழக்கம் என்றும், இந்தத் தேர்தலில் 20 முதல் 25 லட்சம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளதாகவும் அவர் விளக்கினார். இதனால் எண்ணிக்கையில் அதிகரிப்பு தோன்றினாலும், உண்மையான வாக்கு சதவீத உயர்வு இல்லை என்றார்.

மேலும், இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார். நாங்கள் களத்தில் நேரடியாக மக்களை சந்தித்த அனுபவத்தின் அடிப்படையில் இதை உறுதியாக கூறுகிறோம், என தெரிவித்தார். தொங்கு சட்டமன்றம் குறித்து பேசுகையில், நான் தொங்கு சட்டமன்றம் அமையும் என்று கூறவில்லை. தேர்தலுக்கு பின் அரசியல் சூழல் மாறலாம் என்று தான் குறிப்பிட்டேன். குறிப்பாக நடிகர் விஜய் பெறும் வாக்கு சதவீதத்தை பொறுத்து மாற்றங்கள் ஏற்படலாம், என்றார். தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை காத்திருந்து பின்னர் முழு அரசியல் நிலை தெளிவாகும் என திருமாவளவன் கூறினார்.
