மக்களின் ஆதரவுடன் தான் தவெக ஆட்சி நடைபெற்று வருகிறது என்ற முதலமைச்சர் விஜய்யின் கருத்துக்கு, சிபிஎம் மாநிலச் செயலாளர் சண்முகம் பதிலடி அளித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தவெக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வழங்கிய ஆதரவு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, “குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழ்நாட்டில் அமையக்கூடாது என்பதற்காகவே தவெக அரசுக்கு ஆதரவு வழங்கினோம். நாங்கள் ஆதரவு அளிக்காமல் இருந்திருந்தால் மே 10ஆம் தேதி நடைபெற்ற பதவியேற்பு விழாவே நடந்திருக்காது” என்று கூறினார்.

மேலும், “மே 8 மற்றும் 9ஆம் தேதிகளில் நிலவிய அரசியல் சூழ்நிலையில், நாங்கள் ஆதரவு வழங்காமல் இருந்திருந்தால் மாநிலத்தில் அரசியல் நிச்சயமற்ற நிலை உருவாகியிருக்கும். அதனைத் தொடர்ந்து எந்த நேரத்திலும் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு இருந்தது” என்றார். தமிழ்நாட்டில் பாஜக காலூன்றுவதைத் தடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயல்பட்டு வருவதாகவும், அதற்காகவே ஒத்த கருத்துடைய கட்சிகளுக்கு ஆதரவு வழங்கி வருவதாகவும் சண்முகம் தெரிவித்தார்.
மேலும், “பின்வாசல் வழியாக குடியரசுத் தலைவர் ஆட்சி வருவதை ஏற்க முடியாது. அதனைத் தடுக்கவே தவெகவுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தோம்” என்றும் அவர் கூறினார். முதலமைச்சர் விஜய், மக்களின் ஆதரவால் மட்டுமே ஆட்சி நடைபெறுகிறது என்று கூறிய நிலையில், சிபிஎம் ஆதரவின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டி சண்முகம் தெரிவித்துள்ள இந்த கருத்துகள் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளன.
“மக்கள் குரல் கேட்கிறதா”?…முதல்வருக்கு முன்னாள் சாபாநாயகர் அப்பாவு சரமாரி கேள்வி?
