கடந்த ஆட்சிக் காலத்தில் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக வெளியிடப்பட்ட டெண்டரை தற்போதைய தமிழக அரசு ரத்து செய்துள்ளது. இந்த முடிவு போக்குவரத்து துறையிலும் அரசியல் வட்டாரங்களிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சியில் பல்வேறு துறைகளில் வெளியிடப்பட்ட டெண்டர்கள் மற்றும் ஒப்பந்தங்கள் மீளாய்வு செய்யப்பட்டு வருகின்றன. பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத்துறை, குடிநீர் வழங்கல் வாரியம் மற்றும் மின்சார வாரியம் உள்ளிட்ட துறைகளில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த ஆய்வுகளின் அடிப்படையில், குறுகிய காலத்தில் வெளியிடப்பட்ட பல டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பல்வேறு துறைகளில் 100-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல், ஜெர்மனியின் கே.எஃப்.டபிள்யூ (KfW) வங்கியின் நிதியுதவியுடன் 500 மின்சார பேருந்துகளை வாங்குவதற்காக முந்தைய ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டமும் தற்போது கைவிடப்பட்டுள்ளது. நகர்ப்புற போக்குவரத்தை நவீனப்படுத்தவும், சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைக்கவும் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டது. மின்சார பேருந்துகள், டீசல் பேருந்துகளை விட குறைந்த பராமரிப்பு செலவில் இயங்கக்கூடியவை என்பதால், பொதுப் போக்குவரத்தில் அவற்றின் பயன்பாட்டை அதிகரிக்க பல்வேறு முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாகவே 500 புதிய மின்சார பேருந்துகளை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு, அதற்கான ஒப்பந்த நடவடிக்கைகளும் தொடங்கப்பட்டிருந்தன.
எனினும், இந்த பேருந்துகளை நேரடியாக வாங்கி இயக்குவதற்கும், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களை நியமிப்பதற்கும் போக்குவரத்துக் கழகங்களிடம் போதுமான நிதி வசதி இல்லை என அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே டெண்டர் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்குப் பதிலாக, மொத்த செலவு ஒப்பந்த (Gross Cost Contract – GCC) முறை செயல்படுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இந்த முறையில், தனியார் நிறுவனங்களே மின்சார பேருந்துகளை வாங்கி, இயக்கி, பராமரிக்கும். அதற்கான சேவைக்கட்டணத்தை அரசு நிர்ணயிக்கப்பட்ட அளவில் வழங்கும்.
இந்த புதிய திட்டத்தின் கீழ், சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திற்காக 625 மின்சார பேருந்துகளை தனியார் நிறுவனங்கள் மூலம் இயக்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளது. மேலும், இந்த GCC முறைக்கு ஒப்புதல் பெறும் நோக்கில் போக்குவரத்துத் துறை சார்பில் கடந்த ஜூன் 18ஆம் தேதி KfW வங்கிக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், அரசு நேரடி கொள்முதல் முறையிலிருந்து விலகி, தனியார் பங்களிப்புடன் மின்சார பேருந்து சேவையை விரிவுபடுத்தும் புதிய அணுகுமுறையை தேர்வு செய்துள்ளது.
தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க கர்நாடகாவுக்கு உத்தரவு
