நாடாளுமன்ற மக்களவைத் தொகுதி மறுவரையறை தொடர்பாகத் தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் இன்று (12.08.2026) தனித் தீர்மானம் கொண்டு வந்த நிலையில், தொகுதி மறுவரையறைக்கு எதிரான தி.மு.க-வின் தொடர் போராட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் உரையாற்றினார்.
“தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது”
சட்டமன்றத்தில் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசி உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின். “தொகுதி மறுவரையறை (DELIMITATION) என்ற பெயரில் எக்காரணம் கொண்டும் நம்முடைய தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது என்பதுதான் எங்களுடைய உறுதியான நிலைப்பாடு. தற்போதைய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய மறுவரையறை கொண்டு வந்தால் அது எவ்வளவு பெரிய ஆபத்தாக அமையும் என்பதை இந்தியாவுக்கே முதன்முதலாகச் சொன்ன இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமும், மு.க.ஸ்டாலினும் தான்.” என்று தனது உரையில் அழுத்தமாகத் தெரிவித்தார்.

திமுக அரசின் தொடர் நடவடிக்கைகள்
தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் முந்தைய திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை உதயநிதி ஸ்டாலின் பேரவையில் பட்டியலிட்டார்.
- 2024 பிப்ரவரி: தமிழ்நாட்டின் எம்.பி.க்கள் எண்ணிக்கை குறையக் கூடாது என அன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினார்.
- அமைச்சரவை & அனைத்துக் கட்சிக் கூட்டம்: இது தொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தையும், அதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் மு.க.ஸ்டாலின் கூட்டி ஆலோசித்தார்.
- 7 மாநில முதல்வர்களுக்குக் கடிதம்: தொகுதி மறுவரையறையின் ஆபத்துகளை விளக்கி 7 மாநில முதலமைச்சர்களுக்கும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
- கூட்டுச் செயற்குழு கூட்டம் (JAC): சென்னையில் 5 மாநில முதலமைச்சர்கள் மற்றும் 10-க்கும் மேற்பட்ட முக்கியக் கட்சித் தலைவர்கள் பங்கேற்ற கூட்டுக் செயல் கூட்டத்தை நடத்தினார்.

“25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும்”
சென்னையில் நடைபெற்ற கூட்டுக் செயற்குழு கூட்டத்தில் தாம் வழங்கிய விளக்கக்காட்சி (Presentation) குறித்துப் பேசிய உதயநிதி ஸ்டாலின், 2026-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயித்தால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும் என்றும், கட்டுப்படுத்தாத வட மாநிலங்களில் எம்.பி. தொகுதிகள் அதிகரிக்கும் என்றும் சுட்டிக்காட்டினார். எனவே, தொகுதி மறுவரையறை முறையை அடுத்த 25 ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றும், 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படியே மக்களவைத் தொகுதிகள் தொடர வேண்டும் என்பதே கூட்டத்தில் முக்கிய முடிவாக எடுக்கப்பட்டுச் சட்டமன்றத்திலும் அறிவிக்கப்பட்டது என்றார்.
போராட்டம் மற்றும் மசோதா வீழ்ச்சி
தொடர்ந்து பேசிய அவர், இந்த ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி தொகுதி மறுவரையறை மசோதா நகலைத் தமிழ்நாடு முழுவதும் எரித்து எதிர்ப்புத் தெரிவித்ததையும், அப்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலினே அந்தப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்றதையும் நினைவு கூர்ந்தார். தி.மு.க காட்டிய தீவிர எதிர்ப்பின் காரணத்தினாலேயே அந்த மசோதா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது என்றும், அதனை இந்த அரசு தங்களது தீர்மானத்தில் குறிப்பிட்டிருப்பதாகவும் கூறித் தனது உரையை நிறைவு செய்தார்.
