தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் வருகிற செப்டம்பர் 28-ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான தொடக்க விழா மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் நடைபெற உள்ளது.


முதலில் இத்திட்டத்தின் தொடக்க விழா மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தொடக்க விழா மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. 2026 ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளும் இத்திட்டத்தின் கீழ் பயனடைய உள்ளனர்.
தங்க மோதிரங்களில் தனித்துவமான வரிசை எண் இடம்பெறுவதுடன், சேதப்படுத்த முடியாத பாதுகாப்பு பெட்டகத்திலும் அவை வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்தின் முதல் கட்டமாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.
107 மையங்களில் தினமும் 100 குழந்தைகளுக்கு வழங்க ஏற்பாடு
ஜூன் 22 முதல் செப்டம்பர் 28-ம் தேதி திட்டம் தொடங்கப்படும் நாள் வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு, 107 மையங்கள் மூலம் செப்டம்பர் 28 முதல் தினமும் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரங்கள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
திட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்ட பிறகு, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் நேரத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 7.80 லட்சம் குழந்தைகள் பிறப்பு
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் சுமார் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இதில் சுமார் 4.20 லட்சம் பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெறுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவத்தை ஊக்குவிப்பதுடன், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் தீவிர ஏற்பாடுகள்
முதலமைச்சர் விஜய் வருகையை முன்னிட்டு மதுரையில் அரசு மருத்துவமனை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், செப்.28 அன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தின் புனரமைப்பு பணிகளையும் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாய்மாமன் உறவு மற்றும் தமிழர் பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இந்தத் திட்டம், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளை சிறப்பிக்கும் ஒரு நலத்திட்டமாக செயல்படுத்தப்பட உள்ளது.
