தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளும், தூர்வாரும் பணிகளும் இன்னும் முழுமையாக முடிக்கப்படாதது கவலையளிப்பதாகவும், மீண்டும் ஒரு வெள்ளப் பேரழிவைச் சென்னை மாநகரம் தாங்காது என்பதால் இப்பணிகளைப் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் எனப் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
வெள்ளத் தடுப்புப் பணிகளின் தற்போதைய நிலையும் தாமதமும்
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய விவரங்கள்

சென்னையில் கடந்த கால வெள்ள பாதிப்புகளின் நினைவுகள் மக்களின் மனதை விட்டு அகலாத நிலையில், திருப்புகழ் குழுவின் பரிந்துரைப்படி தொடங்கப்பட்ட 1,093 கி.மீ நீள வடிகால் பணிகளில் இன்னும் 5% (தோராயமாக 48 கி.மீ) பணிகள் பாக்கியுள்ளன. அண்ணா நகர் இரண்டாம் நிழற்சாலை, ஆற்காடு சாலை (கோடம்பாக்கம் – வளசரவாக்கம்), அசோக் நகர், கே.கே. நகர் மற்றும் ஆலந்தூர், பெருங்குடி, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பகுதிகளில் வடிகால் பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் தற்போது மிகவும் அபாயகரமான நிலையில் காட்சியளிக்கின்றன.
ஏற்கனவே அமைக்கப்பட்ட வடிகால்களில் 68 இடங்களில் இன்னும் கால்வாய் இணைப்புகள் கொடுக்கப்படாமல் உள்ளன. மேலும், வடிகுழிகளில் சேரும் சகதிகளை வடிகட்டும் பணிகளில் 41% குழிகள் இன்னும் தூர்வாரப்படாமல் விடப்பட்டுள்ளன. இதனால் மழைநீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டு மீண்டும் பெருவெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளது.
எல்நினோ எச்சரிக்கையும் அரசிற்கு விடுக்கப்பட்ட கோரிக்கையும்
நடப்பாண்டில் ‘சூப்பர் எல்நினோ’ தாக்கம் காரணமாகத் தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை அளவுக்கு அதிகமாகப் பெய்யும் என்றும், பல இடங்களில் வெள்ள ஆபத்து இருப்பதாகவும் வல்லுநர் குழு எச்சரித்துள்ளதை அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். கடந்த 1997, 2005, 2015 மற்றும் 2023 (மிக்ஜாம் புயல்) ஆகிய ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான மழை மற்றும் வெள்ளப் பாதிப்புகளைச் சுட்டிக்காட்டிய அவர், நடப்பாண்டும் அதே போன்றதொரு சூழல் உருவானால் சென்னை மக்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது என்றார்.
மேலும், திருப்புகழ் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 42 மாதங்கள் ஆகியும் முழுமையாகச் செயல்படுத்தப்படாததைக் குற்றம்சாட்டியுள்ள அவர், அரசும் சென்னை மாநகராட்சியும் முந்தைய காலப் பேரழிவுகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, வெள்ளத் தடுப்புப் பணிகள், இணைப்புப் பணிகள் மற்றும் தூர்வாரும் பணிகளை உடனடியாகப் போர்க்கால அடிப்படையில் முடிக்க வேண்டும் எனத் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
