நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்தில், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி எனக் கூறி போலி ஆவணங்கள் மூலம் வந்தே பாரத் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயன்ற பெண்ணால் இன்று மதியம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அப்பெண் மனக்குழப்பம் காரணமாக இவ்வாறு ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

எம்.பி எனக்கூறி முன்பதிவு:
நெல்லை ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து தினசரி கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு வடமாவட்டங்களுக்கு நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று மதியம் சுமார் 2 மணியளவில் பெண் ஒருவர் நெல்லை ரயில் நிலைய டிக்கெட் கவுண்டருக்கு வந்துள்ளார். தான் விழுப்புரத்திற்கு ‘வந்தே பாரத்’ ரயிலில் செல்ல வேண்டும் என்றும், தான் ஒரு ராஜ்யசபா எம்.பி என்றும் அங்கிருந்த ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், இதற்கான அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்களைக் காண்பித்து, எம்.பி-க்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டில் தனக்கு டிக்கெட் வழங்குமாறு கேட்டுள்ளார். தொடக்கத்தில் அங்கிருந்த ஊழியர்கள் ஆவணங்களைச் சரியாகச் சரிபார்க்காமல் அவருக்கு டிக்கெட் முன்பதிவு செய்து கொடுத்துள்ளனர்.
அம்பலமான போலி ஆவணங்கள்:
சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணின் நடத்தையில் சந்தேகம் அடைந்த ரயில்வே ஊழியர்கள், அவரிடம் மீண்டும் விசாரணை நடத்தினர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால், அவர் காண்பித்த ஆவணங்கள் அனைத்தும் போலி என்பது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, உடனடியாக நெல்லை ரயில்வே காவல் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், அந்தப் பெண்ணை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் வெளியான உண்மை:
காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் பிரையண்ட் நகர் பகுதியைச் சேர்ந்த ராதாலட்சுமி (55) என்பதும், பள்ளிக்கல்வித்துறையில் சில ஆண்டுகள் பணியாற்றியவர் என்பதும் தெரியவந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு வாகன விபத்தில் காயமடைந்ததிலிருந்து, அவர் கடுமையான மனக்குழப்பத்திற்கு ஆளாகி சிகிச்சை பெற்று வருவதும் விசாரணையில் உறுதியானது.
இதுகுறித்து அவரது உறவினர்களைத் தொடர்புகொண்டபோது, ராதாலட்சுமி மனக்குழப்பம் தொடர்பாகச் சிகிச்சை பெற்று வருவதற்கான மருத்துவ ஆவணங்களை காவல்துறையினருக்கு அனுப்பி வைத்தனர். அதனடிப்படையில், எச்சரிக்கை செய்த போலீஸார் அந்தப் பெண்ணை உறவினர்களிடம் ஒப்படைத்து விடுவித்தனர்.
எப்போதும் மக்கள் நடமாட்டத்துடன் பரபரப்பாகக் காணப்படும் நெல்லை ரயில் நிலையத்தில், பெண் ஒருவர் ராஜ்யசபா எம்.பி எனக்கூறி டிக்கெட் எடுக்க முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
