சேலம் மாநகர் கொண்டலாம்பட்டி பகுதியில் 13 வயது சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கிப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 இளைஞர்களைப் போக்சோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதேவேளையில், சிறுமி பொய் புகார் அளித்துள்ளதாகக் கைதான இளைஞர்களின் பெற்றோர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
பள்ளிக்கு வராததால் அம்பலமான விபரீதம்
கொண்டலாம்பட்டி பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமி, தொடர்ந்து பள்ளிக்கு வராததால் பள்ளி நிர்வாகத்தினர் பெற்றோருக்குத் தகவல் அளித்துள்ளனர். சிறுமியின் நடத்தையில் சந்தேகமடைந்த தாயார், குழந்தைகள் பாதுகாப்பு மையத்திற்கு (Childline) தகவல் கொடுத்தார். குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பினர் நடத்திய விசாரணையில், மதுபோதையில் தன்னிடம் பழகிய சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகச் சிறுமி தெரிவித்தார்.

பிறந்தநாள் விழாவில் தொடங்கிய பழக்கம்
கடந்த ஓராண்டுக்கு முன்பு நடைபெற்ற 13 வயது சிறுமியின் பிறந்தநாள் விழாவிற்கு, அவரது தோழிகளான 17 வயது சிறுமிகள் இருவர் தங்களது ஆண் நண்பர்களை அழைத்து வந்துள்ளனர். அங்குத் தொடக்கத்தில் மது அருந்திப் பழகிய இளைஞர்கள், நாளடைவில் சிறுமியை மதுவுக்கு அடிமையாக்கித் தொடர்ச்சியாகப் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.
4 பேர் போக்சோவில் கைது – 13 பேரிடம் தீவிர விசாரணை
சைல்ட் லைன் அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணை அடிப்படையில் 4 இளைஞர்கள் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேரைப் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
“ஆணுக்கு ஒரு நியாயமா?” – பெற்றோர் வேதனை
இதனிடையே, கைதான இளைஞர்களின் பெற்றோர் காவல் நிலையத்தின் முன் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். “புகார் அளித்த சிறுமி தான் கஞ்சா மற்றும் மதுவுக்கு அடிமையாகி எங்கள் பிள்ளைகளைச் சீரழித்தார். தற்போது வேண்டுமென்றே பொய் புகார் அளித்துள்ளார். ஆணுக்கு ஒரு நியாயம், பெண்ணுக்கு ஒரு நியாயமா?” எனக் கேள்வி எழுப்பி, நியாயமான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தினர்.
பாதிக்கப்பட்ட சிறுமியின் தோழிகளான மற்ற இரு சிறுமிகளுக்கும் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதா என்ற கோணத்திலும், ஆண் போலச் செயல்பட்டு நண்பர்களை அழைத்து வந்த 17 வயது தோழி குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
