சென்னையை அடுத்த அம்பத்தூர் ரயில் நிலையத்தில் பட்டாக்கத்திகளுடன் பதுங்கியிருந்த 17 அரசு ஐடிஐ மாணவர்களைப் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சமூக வலைதளத்தில் (இன்ஸ்டாகிராம்) ஏற்பட்ட ‘கெத்து’ விவகார மோதல் காரணமாக, மற்றொரு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்களைப் படுகொலை செய்யத் திட்டமிட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


அம்பத்தூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிலும் கோகுல் என்ற மாணவன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாங்கள்தான் ‘கெத்து’ என்று கூறி ரீல்ஸ் பதிவிட்டுள்ளான்.
இதற்கு மிண்ட் வள்ளலார் நகர் அரசு ஐடிஐ மாணவர்கள், “நீங்கள் கெத்து இல்லை, வெத்து” என்று கிண்டலடித்துக் கமெண்ட் பதிவிட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அம்பத்தூர் மாணவர்கள், “தைரியம் இருந்தால் அம்பத்தூர் ரயில் நிலையத்திற்கு வாருங்கள், யார் கெத்து என்று பார்ப்போம்” என்று சவால்விட்டுள்ளனர்.

இந்தச் சவாலை ஏற்றுக்கொண்ட எதிர்தரப்பு மாணவர்களைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்ட அம்பத்தூர் ஐடிஐ மாணவர்கள், கடந்த ஒரு வாரமாக இன்ஸ்டாகிராமில் தனிக்குழு அமைத்து கொலைத் திட்டங்களைத் தீட்டியுள்ளனர்.
செப்டம்பர் 29-ம் தேதி மதிய வேளையில், அம்பத்தூர் ரயில் நிலையத்தில் ஐடிஐ மாணவர்கள் சிலர் பட்டாக்கத்திகளுடன் சுற்றித்திரிவதாக அம்பத்தூர் காவல் நிலைய ஆய்வாளர் ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக விரைந்து சென்ற காவல்துறையினரைக் கண்டதும் அந்த மாணவர் கும்பல் தப்பியோட முயன்றது. அங்கிருந்த 19 பேர் கொண்ட கும்பலில் 17 பேரை போலீசார் சுற்றிவளைத்துப் பிடித்தனர். தப்பியோடிய இருவரைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
கைது செய்யப்பட்ட மாணவர்களிடமிருந்து 2 பட்டாக்கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டன.
கைது மற்றும் சீர்திருத்தப் பள்ளி நடவடிக்கை
விசாரணைக்குப் பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 18 வயது நிரம்பிய திருவள்ளூரைச் சேர்ந்த நரேஷ் (19), காட்டூர் சிட்கோ பகுதியைச் சேர்ந்த லோகேஷ் (18) மற்றும் திருநின்றவூரைச் சேர்ந்த கீர்த்தீஸ்வர் (18) ஆகிய 3 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மீதமுள்ள 14 சிறுவர்கள் புரசைவாக்கம் கெல்லிஸ் பகுதியில் உள்ள சிறுவர் சீர்திருத்தப் பள்ளியிலும், காப்பகத்திலும் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சமூக வலைதளங்களில் தங்களது செல்வாக்கைக் காட்டிக்கொள்ளும் போர்வையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இதுபோன்று ஆயுதங்களுடன் வன்முறைகளில் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவது பெற்றோரிடையேயும் சமூக ஆர்வலர்களிடையேயும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களிடையே நிலவும் இது போன்ற ஆபத்தான போக்குகளைத் தடுத்து நிறுத்தக் காவல்துறையினர் மற்றும் கல்வி நிறுவனங்கள் தீவிரக் கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாரிசு சான்று வழங்க ₹8,000 லஞ்சம்.. கிராம நிர்வாக அலுவலர், உதவியாளர் கையும் களவுமாக கைது!
