திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தற்காலிக பெண் ஊழியர் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருதலைக் காதலால் அரங்கேறிய இந்தக் கொடூரத் தாக்குதலில் ஈடுபட்ட நபர், தப்பியோட முயன்றபோது காவல்துறையினரால் துப்பாக்கிச் சூடு நடத்தி சுடப்பட்டுப் பிடிக்கப்பட்டுள்ளார்.
பொன்னேரி அடுத்த உப்பரபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வரி (36). இவருக்கு வினோத் என்ற கணவரும், இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் பொன்னேரி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் கணினி ஆப்பரேட்டராகத் தற்காலிகமாகப் பணிபுரிந்து வருகிறார். இதற்கிடையே, சமூக வலைதளங்களில் ரீல்ஸ் (Reels) செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வந்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை மாலை பணி முடிந்து வெளியே புறப்பட்ட ராஜேஸ்வரியை மறித்து, மாதவரத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பாட்டிலிலிருந்து பெட்ரோலை அவர் மீது ஊற்றியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ராஜேஸ்வரி உயிர் பிழைக்க அலறியடித்துக்கொண்டு அவசர சிகிச்சை பிரிவிற்குள்ளேயே ஓடியுள்ளார். அவரைப் பின் தொடர்ந்து சென்ற பிரகாஷ், சிகரெட் லைட்டரால் அவர் மீது தீயைப் பற்றவைத்துள்ளார்.
உடனடி மீட்பும் தீவிர சிகிச்சையும்
உடலில் தீ பற்றியதால் அலறித் துடித்த ராஜேஸ்வரியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அங்கிருந்த செவிலியர்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் உடனடியாகத் தீயை அணைத்து முதலுதவி அளித்தனர். முகம், மார்பு, கை மற்றும் கால்கள் என உடல் முழுவதும் சுமார் 50 சதவீத தீக்காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், பொன்னேரி நீதித்துறை நடுவர் சரண்யா செல்வம் மருத்துவமனைக்கு நேரில் சென்று ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்.
ஒருதலைக் காதலால் கொடூரம்
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனது மனைவி இறந்த துக்கத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ், பொன்னேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். அப்போது அங்குப் பணியில் இருந்த ராஜேஸ்வரியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அது பின்னர் ஒருதலைக் காதலாக மாறியுள்ளது. ராஜேஸ்வரி சரிவர முகம் கொடுத்துப் பேசாததால் ஆத்திரமடைந்த பிரகாஷ், தொடர்ந்து அவருக்குத் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதன் உச்சக்கட்டமாகவே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார்.

தப்பியோடிய குற்றவாளி சுட்டுப் பிடிப்பு
இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட பொன்னேரி காவல்துறையினர், குற்றவாளியைக் கைது செய்ய முயன்றபோது எதிர்பாராத திருப்பம் ஏற்பட்டது. தலைமறைவாக இருந்த பிரகாஷைப் பிடிக்க முயன்றபோது, அவர் உதவி ஆய்வாளர் தமிழரசன் என்பவரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோட முயன்றார். உடனே சுதாரித்துக் கொண்ட ஆய்வாளர் சிவகுமார், தற்காப்புக்காகப் பிரகாஷின் காலில் சுட்டு அவரை மடக்கிப் பிடித்தார்.
இந்த மோதலில் காயம்டைந்த உதவி ஆய்வாளர் தமிழரசன் மற்றும் சுடப்பட்ட குற்றவாளி பிரகாஷ் இருவரும் பொன்னேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அரசு மருத்துவமனை வளாகத்தில் அரங்கேறிய இந்தச் சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
