கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்த 9-ஆம் வகுப்பு மாணவி மாயமாகி 4 நாட்களாகியும் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

இதையடுத்து, சிறுமியைத் தேடி 2 தனிப்படைகளை அமைத்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வசிக்கும் நரிக்குறவ இன மக்கள், இரவு நேரங்களில் குளச்சல் காவல் நிலையம் எதிரே உள்ள ஆவின் பாலகம் அருகே குடும்பத்துடன் தங்குவது வழக்கம்.
அந்த வகையில், உதயமார்த்தாண்டம் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த சரவணன் தனது மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் அப்பகுதியில் தங்கியிருந்தார். இவரது இரண்டாவது மகள் முத்து, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
திடீரென மாயமான மாணவி:
கடந்த நவம்பர் 15-ஆம் தேதி இரவு சிறுமி முத்து சாலையோரம் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மாயமானதாகக் கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்குப் பிறகு பெற்றோர் பல இடங்களில் தேடியும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, குளச்சல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணையைத் தொடங்கினர்.
சந்தேக நபரின் நடமாட்டம் குறித்து விசாரணை:
பெற்றோரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர்கள் தங்கியிருந்த பகுதிக்கு மர்ம நபர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்துக்கு இடமான வகையில் வந்து சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.
இதனால் சிறுமி கடத்தப்பட்டிருக்கலாமா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
சிறுமி மாயமாகி 4 நாட்களாகியும் எந்தத் தகவலும் கிடைக்காததால் குடும்பத்தினர் கவலையில் ஆழ்ந்துள்ளனர். இதையடுத்து, மாயமான மாணவியை விரைவாகக் கண்டுபிடிக்க 2 தனிப்படைகள் அமைத்து போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
