இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி இளம்பெண்ணிடம் 16 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.1.07 லட்சம் பணத்தைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிய இளைஞரை ஓசூர் போலீசார் ஏலகிரி மலையில் கைது செய்துள்ளனர்.
மேலும், இதேபோல் அந்த இளைஞருடன் பழகி வந்த மூன்று இளம்பெண்களை போலீசார் எச்சரித்து மோசடியில் சிக்காமல் தடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம், லண்டன் மெஷின் ரோடு பகுதியைச் சேர்ந்த கஜேந்திரன் என்பவரின் மகன் கௌஷிக் (24). இவருக்கும் 24 வயதுடைய இளம்பெண் ஒருவருக்கும் சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் செயலி மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
நாளடைவில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து கௌஷிக், அந்த இளம்பெண்ணை சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வரவழைத்து நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். அப்போது, தான் பிரபல ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், ஓசூரில் உறவினர்கள் இருப்பதாகவும் கூறியதுடன், விரைவில் திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
கௌஷிக்கின் பேச்சை நம்பிய அந்த இளம்பெண், அவர் கேட்டபோதெல்லாம் ரொக்கமாக ரூ.85 ஆயிரமும், கூகுள் பே மூலம் ரூ.22 ஆயிரமும் என மொத்தம் ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் வழங்கியுள்ளார். மேலும், தனது செயின், நெக்லஸ், கம்மல் உள்ளிட்ட 16 சவரன் தங்க நகைகளையும் அவரிடம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் 28-ஆம் தேதி சேலத்திற்குச் சென்ற கௌஷிக், திருமணம் செய்து கொள்ளலாம் எனக் கூறி அந்த இளம்பெண்ணைத் தனது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு அழைத்து வந்துள்ளார். பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் இளம்பெண்ணைக் காத்திருக்குமாறு கூறிவிட்டு அங்கிருந்து சென்றவர், நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.
இதனால் சந்தேகமடைந்த இளம்பெண், கௌஷிக்கின் செல்போனுக்குத் தொடர்பு கொண்டபோது அது அணைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சொந்த ஊருக்குச் சென்று பெற்றோரிடம் நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
தொடர்ந்து, பெற்றோருடன் ஓசூர் நகர காவல் நிலையத்திற்குச் சென்ற இளம்பெண் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், காவல் ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
செல்போன் சிக்னல் மற்றும் ரகசியத் தகவல்களின் அடிப்படையில், திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் பதுங்கியிருந்த கௌஷிக்கை போலீசார் சுற்றிவளைத்துக் கைது செய்து ஓசூருக்கு அழைத்து வந்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில், இளம்பெண்ணிடம் பெற்ற 16 சவரன் நகைகளில் 3 சவரனை விற்பனை செய்து, அந்தப் பணத்தில் விலையுயர்ந்த இருசக்கர வாகனம் ஒன்றை வாங்கியதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், இதேபோன்று இன்ஸ்டாகிராம் மூலம் மேலும் மூன்று இளம்பெண்களுடன் கௌஷிக் பழகி வந்ததும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அந்தப் பெண்களைத் தொடர்புகொண்ட போலீசார், கௌஷிக்கின் மோசடி பின்னணி குறித்து எடுத்துரைத்து எச்சரித்துள்ளனர். இதன் மூலம் மேலும் மூன்று பெண்கள் ஏமாற்றப்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட கௌஷிக்கிடமிருந்து 9 சவரன் தங்க நகைகள் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
சமூக வலைத்தளங்களில் அறிமுகமாகும் முகம் தெரியாத நபர்களிடம் பணம் மற்றும் நகைகளை வழங்கி ஏமாற வேண்டாம் என்றும், போலியான சமூக வலைத்தளக் கணக்குகள் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் காவல்துறை தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
