Homeசெய்திகள்ஆவடிதிருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் ஆன்லைன் மோசடி – கரூரைச் சேர்ந்த பெண் கைது;...

திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் ஆன்லைன் மோசடி – கரூரைச் சேர்ந்த பெண் கைது; 13 வங்கிக் கணக்குகள் மூலம் சைபர் கும்பலுக்கு உடந்தை!

-

- Advertisement -

திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி, வெளிநாட்டில் இருந்து பரிசுப் பொருட்கள் அனுப்பியுள்ளதாகவும், அவற்றைச் சுங்கத்துறையிலிருந்து விடுவிக்கப் பணம் தேவைப்படுவதாகவும் கூறி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் மோசடி செய்த வழக்கில், கரூரைச் சேர்ந்த 30 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் ஆன்லைன் மோசடி – கரூரைச் சேர்ந்த பெண் கைது; 13 வங்கிக் கணக்குகள் மூலம் சைபர் கும்பலுக்கு உடந்தை!

மேலும், இவர் தனது பெயரில் 13 வங்கிக் கணக்குகளைத் தொடங்கி சைபர் மோசடி கும்பலுக்கு வழங்கியதும், அந்தக் கணக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் 26 சைபர் குற்ற வழக்குகள் பதிவாகியிருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

திருமண இணையதளம் மூலம் அறிமுகமான நபர்

ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கொளரிபேட்டை, பழைய கல்லுக்கடை தெருவைச் சேர்ந்த மாலதி சாகு (51), Shadi.com என்ற திருமண தகவல் இணையதளத்தில் தனது விவரங்களைப் பதிவு செய்திருந்தார். அப்போது வெளிநாட்டு கைபேசி எண்ணிலிருந்து வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்ட அபிஷேக் என்ற நபர், தான் லண்டனில் வசிக்கும் பெரிய தொழிலதிபர் என்றும், மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாலதி சாகுவை இரண்டாவது திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறி அவருடன் நெருக்கமாகப் பழகியுள்ளார். பின்னர், அவரைச் சந்திப்பதற்காக தங்கம், வைரம் மற்றும் வெளிநாட்டுப் பணம் உள்ளிட்ட பரிசுப் பொருட்களுடன் டெல்லி விமான நிலையம் வந்தபோது, சுங்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகக் கூறி நாடகமாடியுள்ளார்.

ரூ.22.10 லட்சம் பணம் பெற்று மோசடி

தன்னை விடுவிப்பதற்காகச் சுங்கத்துறை அதிகாரிகள் பணம் கேட்பதாகக் கூறிய அந்த நபர், அதற்குப் பணம் அனுப்புமாறு மாலதி சாகுவிடம் கேட்டுள்ளார். இதனை நம்பிய அவர், கடந்த 07.04.2026 முதல் 10.06.2026 வரை பல்வேறு தவணைகளில் மொத்தம் ரூ.22 லட்சத்து 10 ஆயிரம் அனுப்பியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்ட பின்னர் அந்த நபர் மோசடி செய்தது தெரியவந்தது.

இதுகுறித்து மாலதி சாகு அளித்த புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின்படி, இணையவழிக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

13 வங்கிக் கணக்குகள் தொடங்கிய பெண்

விசாரணையில், புகார்தாரர் ரூ.16 லட்சத்து 10 ஆயிரம் பணம் செலுத்திய ஐந்து வங்கிக் கணக்குகளின் உரிமையாளர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆஷா (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு BNSS சட்டப்பிரிவு 35(3)-ன் கீழ் நோட்டீஸ் வழங்கி விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது, ஆஷாவுக்கு ஃபேஸ்புக் மூலம் டாக்டர் ஃப்ரெட் ஆண்டனி என்ற நபர் அறிமுகமாகியுள்ளார். தான் அயர்லாந்தில் மருத்துவராகப் பணிபுரிவதாகவும், மனைவியைப் பிரிந்து வாழ்வதாகவும், தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும் கூறிய அந்த நபர், ஆஷாவைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

மேலும், வெளிநாட்டுப் பணம், தங்கம், வைர நெக்லஸ் மற்றும் ஐபோன் உள்ளிட்ட பரிசுப் பொருட்கள் இருப்பது போன்ற புகைப்படங்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். அந்தப் பரிசுப் பொருட்களை ஆஷாவின் முகவரிக்கு கொரியர் மூலம் அனுப்பியதாகவும், அவை சுங்கத்துறையில் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அவற்றை விடுவிக்கவும், வெளிநாட்டுப் பணத்தை இந்திய ரூபாயாக மாற்றி அனுப்பவும் வங்கிக் கணக்குகள் தேவைப்படுவதாகக் கூறியுள்ளார். இதனை நம்பிய ஆஷா, கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு தனது பெயரில் கரூர் மாவட்டத்தில் 13 வங்கிக் கணக்குகளைத் தொடங்கியுள்ளார்.

வங்கிப் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகள் டெல்லிக்கு அனுப்பி வைப்பு

தனது பெயரில் தொடங்கிய 13 வங்கிக் கணக்குகளின் வங்கிப் புத்தகங்கள், ஏடிஎம் அட்டைகள், கடவுச்சொற்கள் மற்றும் புதிய சிம் கார்டுகளைப் பெற்ற ஆஷா, மோசடி நபர்கள் தெரிவித்த டெல்லி முகவரிக்கு பதிவு அஞ்சல் மூலம் அனுப்பியுள்ளார். இதன் மூலம் சைபர் மோசடிக் கும்பலுக்கு உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், ஆஷா அனுப்பிய வங்கிக் கணக்குகள் தொடர்பாக நாடு முழுவதும் NCRP இணையதளத்தில் 26 சைபர் குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் கண்டறியப்பட்டது.

பெண் கைது – புழல் சிறையில் அடைப்பு

இதையடுத்து, ஆவடி காவல் ஆணையாளர் செந்தில்குமார் உத்தரவின்பேரில், இணையவழிக் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் ஆஷாவைக் கைது செய்தனர். பின்னர் அவரைப் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

பொதுமக்களுக்கு காவல்துறை எச்சரிக்கை

Instagram, Facebook உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மற்றும் திருமண தகவல் இணையதளங்கள் வாயிலாக அறிமுகமாகும் முகம் தெரியாத நபர்களின் ஆசைவார்த்தைகளையும் போலியான வாக்குறுதிகளையும் நம்பி பணத்தை இழக்க வேண்டாம் என ஆவடி காவல் ஆணையரகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறிப்பாக, வெளிநாட்டுப் பரிசுப் பொருட்கள், சுங்கத்துறை கட்டணம், பணப் பரிமாற்றம் போன்ற காரணங்களைக் கூறி பணம் கேட்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், வங்கிக் கணக்குகள், ஏடிஎம் அட்டைகள், கடவுச்சொற்கள் மற்றும் சிம் கார்டுகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

வீட்டை லீசுக்கு விடுவதாகக் கூறி ரூ.2.8 லட்சம் மோசடி – பெரவள்ளூரில் பெண் கைது; கணவருக்குப் போலீசார் வலைவீச்சு!

MUST READ