Homeசெய்திகள்ஆவடிஆவடி அருகே சாலையில் கிடந்த பூமாலையால் விபத்து: ஆட்டோ மீது மோதி இளைஞர் பரிதாப பலி!

ஆவடி அருகே சாலையில் கிடந்த பூமாலையால் விபத்து: ஆட்டோ மீது மோதி இளைஞர் பரிதாப பலி!

-

- Advertisement -

ஆவடி அருகே சாலையில் கிடந்த பூமாலை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் நிலைதடுமாறி, சாலையோரத்தில் நின்றிருந்த ஆட்டோ மீது மோதி விபத்துக்குள்ளான இளைஞர் உயிரிழந்தார். மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சக்கரத்தில் சிக்கிய பூமாலை

திருமுல்லைவாயல் கிருஷ்ணா கார்டன், நந்தினி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் வாசுதேவன். இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், வெள்ளானூரில் உள்ள தனது நண்பரின் வீட்டிற்குச் சென்ற சுரேஷ், பின்னர் நண்பரின் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.

அப்போது வெள்ளானூர் ஆரிக்கம்பேடு சாலையில் உள்ள இந்துஸ்தான் பெட்ரோல் பங்க் அருகே சாலையில் கிடந்த பூமாலை எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் வாகனம் நிலைதடுமாறியதில், சுரேஷ் சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவின் பின்புறத்தில் மோதி கீழே விழுந்தார்.

மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழப்பு

இந்த விபத்தில் சுரேஷின் வலது நெற்றிப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், மார்பு மற்றும் நெற்றிப் பகுதிகளில் உட்காயங்களும் ஏற்பட்டன.

இதுகுறித்து தகவல் அறிந்த போக்குவரத்துப் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த சுரேஷை சிகிச்சைக்காக பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

போலீசார் விசாரணை

இந்தச் சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சாலையில் கிடந்த பூமாலை இருசக்கர வாகனத்தின் சக்கரத்தில் சிக்கியதால் ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் கோர விபத்து: மினி பேருந்து – கன்டெய்னர் லாரி நேருக்கு நேர் மோதல்; 23 பேர் பலி, 20 பேர் காயம்!

MUST READ