அம்பத்தூர் அடுத்த கொரட்டூர் பகுதியில் பெய்த தொடர் மழை மற்றும் காற்றின் காரணமாக ராட்சத மரம் ஒன்று வேரோடு சாய்ந்து, விவேகானந்தா பள்ளியின் சுற்றுச்சுவர் மீது விழுந்தது. இந்த விபத்தில் பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சேதமடைந்த நிலையில், பள்ளிக்கு விடுமுறை என்பதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.


பள்ளிச் சுவரை நொறுக்கிய ராட்சத மரம்
கொரட்டூர் டி.என்.எச்.பி. 17-வது தெருவில் அமைந்துள்ள விவேகானந்தா பள்ளியின் அருகே இருந்த ராட்சத மரம், தொடர் மழை மற்றும் பலத்த காற்றின் காரணமாக வேரோடு சாய்ந்தது. இந்த மரம் பள்ளியின் சுற்றுச்சுவர் மீது விழுந்ததில் சுவரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது.
விடுமுறை நாளால் தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து
வழக்கமான நாட்களில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நடமாட்டத்தால் பரபரப்பாகக் காணப்படும் பள்ளி, விபத்து நிகழ்ந்த நாளில் விடுமுறை காரணமாகக் காலியாக இருந்தது. இதனால் மரம் விழுந்தபோது அதன் அருகே மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் இல்லாததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து பாதிப்பு
மரம் சாலையின் குறுக்கே விழுந்ததால், கொரட்டூர் காவல் நிலையத்திலிருந்து விவேகானந்தா பள்ளிக்குச் செல்லும் முக்கிய சாலையில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அந்த வழியாகச் செல்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
மரத்தை அகற்றி சீரமைக்கக் கோரிக்கை
சாலையின் குறுக்கே விழுந்துள்ள ராட்சத மரத்தை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், சேதமடைந்த பள்ளியின் சுற்றுச்சுவரைச் சீரமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், சாலையில் போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்கவும், மழைக்காலங்களில் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதைத் தடுக்க ஆபத்தான நிலையில் உள்ள மரங்களை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அம்பத்தூர் மண்டல அதிகாரிகள் முன்வர வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆவடியில் தற்காலிகப் பேருந்து நிலையம் அவலம்: சேறும் சகதியுமாக மாறியதால் பயணிகள் கடும் அவதி!
