பூவிருந்தவல்லி நகராட்சி அலுவலகம் மற்றும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ.) அலுவலகம் ஆகியவை ஒரே வளாகத்தில் செயல்பட்டு வரும் நிலையில், போதிய பராமரிப்பின்மை மற்றும் சுகாதாரச் சீர்கேடுகளால் அந்த அரசு வளாகமே சிதிலமடைந்து காணப்படுவது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளாகத்தில் நிலவும் முக்கியப் பிரச்சினைகள்:
சிதிலமடைந்த கட்டடத்தால் விபத்து அபாயம்: அலுவலகக் கட்டடம் முறையாகப் பராமரிக்கப்படாததால், மேற்கூரை மற்றும் சுவர்களில் உள்ள சிமெண்ட் பூச்சுகள் ஆங்காங்கே பெயர்ந்து விழுந்த வண்ணம் உள்ளன. இதனால் அலுவலகப் பணிகளுக்காகத் தினசரி வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் பணியாளர்களின் தலையில் சிமெண்ட் பூச்சுகள் இடிந்து விழும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.

கழிவுநீர் கசிவு மற்றும் தொற்றுநோய் அபாயம்: சாலையில் கழிவுநீரை விடும் பொதுமக்களுக்கு அபராதம் விதிக்கும் நகராட்சி நிர்வாகத்தின் அலுவலகத்திலேயே, கழிவறைக் குழாய்கள் சேதமடைந்து மிகுந்த துர்நாற்றத்துடன் கழிவுநீர் கொட்டி வருகிறது. ஜன்னல்கள் மற்றும் சுவர் இடுக்குகளில் செடி, கொடிகள் மற்றும் மரக்கன்றுகள் முளைத்துப் பாழடைந்த கட்டடம் போலக் காட்சியளிப்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உருவாகியுள்ளது.
தெருநாய்கள் நடமாட்டம்: அலுவலக வளாகத்திற்குள் சொறி பிடித்த தெருநாய்களின் நடமாட்டம் அதிகரித்துக் காணப்படுவதால், மனு அளிக்க வரும் பொதுமக்களும் அலுவலர்களும் அச்சத்துடனே நடமாடும் சூழல் நிலவுகிறது.

அதிகாரிகள் மற்றும் மக்கள் பிரதிநிதி மீது அதிருப்தி: நகரத்தைத் தூய்மையாக வைத்திருக்கவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் வேண்டிய நகராட்சி அலுவலகமே இத்தகைய அவல நிலையில் இருப்பதை நகராட்சி ஆணையரும் சுகாதார அலுவலரும் கண்டுகொள்ளாமல் அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், இதே வளாகத்தில் உள்ள தனது அலுவலகத்திற்குத் தினந்தோறும் வந்து செல்லும் பூந்தவல்லி எம்.எல்.ஏ. ஆ. பிரகாசமும் இதனைக் கண்டுகொள்ளாமல் இருப்பது பொதுமக்களை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
எனவே, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழும் முன்பு சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, கட்டடத்தைப் புனரமைக்கவும், வளாகத்தைச் சுகாதாரமாகப் பராமரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

