Homeசெய்திகள்கட்டுரைதமிழகத்தில் அரிசி விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு!

தமிழகத்தில் அரிசி விலை ராக்கெட் வேகத்தில் உயர்வு!

-

- Advertisement -

 

தமிழகம் முழுவதும் கடந்த 4 மாதங்களாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஏழை, எளிய மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை விலை உயர்ந்துள்ள நிலையில், அரிசிப் பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தாமிரபரணி பாசனப் பகுதிகளில் முப்போக நெல் சாகுபடியை மீண்டும் உறுதி செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஏழை, எளிய மக்களின் அன்றாட உணவான அரிசியின் விலை கடந்த நான்கு மாதங்களாகத் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

சாதாரண ரக அரிசி முதல் சன்ன ரக அரிசி வரை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.40 வரை விலை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனால் கூலி வேலை செய்து வாழும் குடும்பங்கள் முதல் நடுத்தர வர்க்கத்தினர் வரை மாதாந்திர குடும்பச் செலவுகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

குறிப்பாக, தென் மாவட்டங்களில் போதிய பருவமழை இல்லாததால் நீர்நிலைகளில் நீர்மட்டம் குறைந்து வருகிறது. பாசனத்துக்குத் தேவையான தண்ணீர் கிடைக்காத சூழலில் நடப்பாண்டில் நெல் சாகுபடி பரப்பளவு குறைந்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதனால் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டு, சந்தைக்கு வரும் அரிசியின் அளவும் குறைந்துள்ளது. உற்பத்தி சரிவு ஒருபுறம் இருக்க, செயற்கையான தட்டுப்பாடும் விலை உயர்வுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

விவசாயிகளுக்கு விலை இல்லை; நுகர்வோருக்கு விலை அதிகம்!:

சந்தையில் அரிசி விலை உயர்ந்து வரும் நிலையில், அதன் பலன் நெல்லை விளைவிக்கும் விவசாயிகளுக்குக் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அறுவடைக் காலங்களில் இடைத்தரகர்களும் சில வியாபாரிகளும் விவசாயிகளிடமிருந்து குறைந்த விலைக்கு நெல்லைக் கொள்முதல் செய்து, பின்னர் அதனைச் சேமித்து வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.

உற்பத்திச் செலவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், விளைவித்த நெல்லுக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர்.

அதேநேரத்தில், நுகர்வோர் அதிக விலை கொடுத்து அரிசி வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் இடையே உள்ள இந்த முரண்பாட்டுக்குத் தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது.

தாமிரபரணி பாசனத்தில் முப்போக சாகுபடி கேள்விக்குறி!:

வற்றாத ஜீவநதியாகக் கருதப்படும் தாமிரபரணியை நம்பி திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.

கடந்த காலங்களில் தாமிரபரணி பாசனப் பகுதிகளில் கார், பிசானம், முன்கார் என ஆண்டுக்கு மூன்று போகங்கள் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தன.

ஆனால், முறையான நீர் மேலாண்மை இல்லாமை, அணைகள் மற்றும் பாசனக் குளங்களைப் பராமரிப்பதில் உள்ள குறைபாடுகள், பருவம் தவறிப் பெய்யும் மழை உள்ளிட்ட காரணங்களால் சாகுபடி பாதிக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.

தற்போது ஒரு போக சாகுபடிக்கே தண்ணீர் திறக்கக் கோரி விவசாயிகள் போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதற்கிடையே, வடகிழக்குப் பருவமழை இயல்பை விட 14 சதவீதம் குறைவாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் நெல் சாகுபடியைத் தொடங்கினாலும், பயிர்களுக்குத் தேவையான நேரத்தில் தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் விவசாயிகளிடையே நிலவுகிறது.

பொங்கல் வரை விலை குறைய வாய்ப்பில்லை?:

அரிசி விலை உயர்வு வரும் பொங்கல் பண்டிகை வரையிலும் தொடர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

விலை உயர்வால் பெரிய வியாபாரிகள் மட்டுமின்றி சிறிய அளவில் அரிசிக் கடை நடத்தி வரும் வியாபாரிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். வாடிக்கையாளர்கள் வாங்கும் அளவைக் குறைப்பதால் விற்பனை பாதிக்கப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

தற்போதைய நிலை தொடர்ந்தால், வரும் காலங்களில் நெல் சாகுபடி மேலும் குறைந்து அரிசி விலை அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் எச்சரிக்கின்றனர்.

எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு அரிசிப் பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகளைக் கண்டறிந்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நியாயவிலைக் கடைகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலம் தரமான அரிசியை மலிவு விலையில் தடையின்றி வழங்க வேண்டும்.

விவசாயிகளுக்கு உரிய கொள்முதல் விலை கிடைப்பதை உறுதி செய்வதுடன், தாமிரபரணி பாசனத்தில் கார், பிசானம், முன்கார் என முப்போக நெல் சாகுபடி நடைபெறுவதற்குத் தேவையான நீர் மேலாண்மைத் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.

சர்வே கல்லா, தீபத்தூணா என்பதை இறுதி செய்யாமல் இடைக்காலமாக தீபம் ஏற்ற அனுமதியா? – உச்சநீதிமன்ற உத்தரவை விமர்சித்த வழக்கறிஞர் வாஞ்சிநாதன்!

MUST READ