சென்னை ஆவடியை அடுத்த பட்டாபிராம் அருகே, கள்ளக்குறிச்சி தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷின் உருவ பொம்மையை மேம்பாலத்தின் கீழ் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு திமுக நிர்வாகிகள் நூதன முறையில் கண்டனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்து, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பட்டாபிராம் பகுதியில் திமுக நிர்வாகிகள் திராவிடன் மகேஷ்குமார் மற்றும் சார்லஸ் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, ‘தெறி’ திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியைப் போன்ற பாணியில், எம்.எல்.ஏ.வின் உருவ பொம்மையை மேம்பாலத்தின் கீழ் தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திராவிடன் மகேஷ்குமார், “பெண் ஆட்சியருக்கு ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய எம்.எல்.ஏ. மீது தமிழக முதலமைச்சர் ‘தெறி’ பட பாணியில் நடவடிக்கை எடுப்பார் எனப் பொதுமக்கள் எதிர்பார்த்தனர்.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாவட்ட ஆட்சியருக்கே பாதுகாப்பு அளிக்க முடியாத சூழலில், மக்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு கிடைக்கும்? தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது உடனடியாகத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டத்தை நடத்தியுள்ளோம்” என்று தெரிவித்தார்.
பெண் மாவட்ட ஆட்சியருக்கு எதிரானதாகக் கூறப்படும் குறுஞ்செய்தி விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற இந்த நூதனப் போராட்டம் பட்டாபிராம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பூவிருந்தவல்லி நகராட்சியின் அவல நிலை; சிதிலமடைந்த எம்.எல்.ஏ அலுவலகம் – அதிருப்தியில் மக்கள்..
