Homeசெய்திகள்ஆவடிரூ.15 கோடி பூர்வீக நிலத்தை அபகரிக்கத் திட்டம்: போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் சிக்கியது!

ரூ.15 கோடி பூர்வீக நிலத்தை அபகரிக்கத் திட்டம்: போலி சான்றிதழ் தயாரித்த கும்பல் சிக்கியது!

-

- Advertisement -

சென்னை ஆவடி அருகே ரூ.15 கோடி மதிப்புள்ள 1.38 ஏக்கர் பூர்வீக நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வட்டாட்சியர் அலுவலகம் தொடங்குவதற்கு சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அந்த அலுவலகத்தின் பெயரில் போலி இறப்பு மற்றும் பிறப்புச் சான்றிதழ்களைத் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

பூர்வீக நிலம் தொடர்பாக புகார்:

சென்னை ஆவடி அருகே கோவில்பதாகை பகுதியைச் சேர்ந்தவர் வாசு. இவரது குடும்பத்திற்குச் சொந்தமான 1.38 ஏக்கர் நிலம் ஆவடி கோவில்பதாகை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சி நடைபெறுவதாக ஆவடி காவல் ஆணையர் அலுவலகத்தின் மத்திய குற்றப்பிரிவில் வாசு புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், கடந்த 1931-ஆம் ஆண்டு கண்ணம்மாள் என்பவரிடம் தனது தாத்தா மாளப்பசெளவுதிரி கிரையம் பெற்று நிலத்தை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார். அவருக்குத் திருமணம் ஆகாததால், அவரது தம்பி குட்டியப்பசெளவுதிரி அந்தச் சொத்தை ஆண்டு அனுபவித்து வந்துள்ளார்.

உயில் மற்றும் பாகப்பிரிவினை மூலம் குடும்பத்தினருக்கு சொத்து:

பின்னர் குட்டியப்பசெளவுதிரியின் மகன் முனியப்பசெளவுதிரி, கடந்த 1972-ஆம் ஆண்டு உயில் எழுதி வைத்துள்ளார். அதன்பிறகு முனியப்பசெளவுதிரியின் மகன்களான வாசு மற்றும் அவரது அண்ணன் தேவராஜ் ஆகிய இருவரும் கடந்த 2013-ஆம் ஆண்டு பாகப்பிரிவினை செய்து சொத்தைப் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 1931-ஆம் ஆண்டு நிலத்தை விற்பனை செய்த கண்ணம்மாள் என்பவரின் வாரிசுகள் எனக் கூறி, அண்ணாம்மாள், அவரது வாரிசுகளான கண்ணம்மாள் மற்றும் முனுசாமி ஆகியோரின் பெயர்களில் போலியான இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

போலி ஆவணங்கள் மூலம் நிலம் விற்பனை:

இந்த போலி இறப்பு மற்றும் வாரிசுச் சான்றிதழ்களைப் பயன்படுத்தி, கடந்த 2020-ஆம் ஆண்டு ஆவடி சார் பதிவாளர் அலுவலகத்தில் சொத்து தொடர்பான பத்திரப் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, கோவில்பதாகையைச் சேர்ந்த லட்சுமி மற்றும் வேப்பம்பட்டைச் சேர்ந்த ஜெயராமன் ஆகியோர் பவர் பெற்றுள்ளனர். பின்னர் அந்த நிலத்தை கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த ஜெயகுமார் மற்றும் அவரது மனைவி ஷைலஜா ஆகியோருக்கு கிரையம் செய்துள்ளனர்.

விசாரணையில் அம்பலமான போலி சான்றிதழ் மோசடி:

வாசு அளித்த புகாரின் அடிப்படையில், கண்ணம்மாள் என்கிற பச்சையம்மாள், முனுசாமி, ஜெயராமன், லட்சுமி மற்றும் ஜெயகுமார் ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் கடந்த 1997-ஆம் ஆண்டுதான் தொடங்கப்பட்டது என்பது தெரியவந்தது. ஆனால், மோசடி கும்பல் கடந்த 1976-ஆம் ஆண்டிலேயே அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தின் பெயரில் இறப்பு மற்றும் பிறப்புச் சான்றிதழ்களைப் போலியாகத் தயாரித்து, அதில் அரசு முத்திரையிட்டு பெற்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அதாவது, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகம் தொடங்குவதற்கு சுமார் 21 ஆண்டுகளுக்கு முன்பே அந்த அலுவலகத்தின் பெயரில் போலி சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டிருப்பது இந்த மோசடியின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

மூவர் கைது; புழல் சிறையில் அடைப்பு:

போலி ஆவணங்கள் மூலம் ரூ.15 கோடி மதிப்புள்ள பூர்வீக நிலத்தை அபகரிக்க முயற்சி செய்தது விசாரணையில் தெரியவந்ததைத் தொடர்ந்து, லட்சுமி, ஜெயராமன் மற்றும் ஜெயகுமார் ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.

80 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பதால் கண்ணம்மாள் மற்றும் முனுசாமி ஆகியோர் கைது செய்யப்படவில்லை. கைது செய்யப்பட்ட மூவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.

வட்டாட்சியர் அலுவலகம் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த அலுவலகத்தின் பெயரில் போலி அரசு சான்றிதழ்கள் தயாரிக்கப்பட்டு, ரூ.15 கோடி மதிப்புள்ள பூர்வீக நிலத்தை அபகரிக்க முயன்ற சம்பவம் ஆவடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமண ஆசைகாட்டி பெண்ணிடம் ரூ.22.10 லட்சம் ஆன்லைன் மோசடி – கரூரைச் சேர்ந்த பெண் கைது; 13 வங்கிக் கணக்குகள் மூலம் சைபர் கும்பலுக்கு உடந்தை!

MUST READ