ஆவடி அருகே சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான பூர்வீகச் சொத்தை, சார் பதிவாளர் உதவியுடன் உறவினர்கள் ஏமாற்றி அபகரித்துக் கொண்டதாகக் கூறி, முதிய தம்பதியினர் ஆவடி சார் பதிவாளர் அலுவலகம் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கின் பின்னணி:
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த தாட்சாயிணி (63) மற்றும் அவரது கணவர் ரங்கநாதன் (70) ஆகியோர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். செய்தியாளர்களிடம் பேசிய மூதாட்டி தாட்சாயிணி கூறுகையில், “ஆவடி வட்டம், பால்வேடு கிராமத்தில் எனது பெற்றோருக்குச் சொந்தமான 3.8 ஏக்கர் நிலம் உள்ளது. என் தந்தையின் வாரிசு சான்றிதழின்படி நானும் எனது சகோதரியும் உட்பட மொத்தம் 5 வாரிசுகள் இருக்கிறோம்.

ஆனால், வாரிசுகள் அனைவரின் அனுமதியையும் பெறாமல், எனது உடன்பிறந்தவர்களான குப்பம்மாள், ரங்கநாதன், வெங்கடேசன் ஆகிய 3 பேர் மட்டும் போலி ஆவணங்கள் மூலம் நிலத்தைப் பிரித்து மோசடி செய்துள்ளனர். மேலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து சுமார் 25 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்தை ஆவடி சார் பதிவாளர் சட்டவிரோதமாகக் கிரையம் செய்து கொடுத்துள்ளார்” எனத் தீவிரக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.
சார்பதிவாளருடன் காரசார வாக்குவாதம்:
போராட்டத்தின் போது அலுவலகத்திற்குள் சென்ற முதிய தம்பதியினர், தற்போதைய சார் பதிவாளரிடம் நேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது பதிலளித்த சார் பதிவாளர், இந்த முறைகேடான பத்திரப்பதிவை தான் செய்யவில்லை என்றும், இது குறித்து உரிய ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தார்.
விசாரணையில், இந்த முறைகேடான பத்திரப்பதிவு சீனிவாச ராவ் என்பவர் மாற்றுப் பணியில் இருந்தபோது நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
உயர் அதிகாரிகளிடம் புகார்:
வாரிசு சான்றிதழில் 5 பேரின் பெயர்கள் உள்ள நிலையில், முறைகேடாக 3 பேருக்கு மட்டும் சொத்தை மாற்றிக் கொடுத்த இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட தம்பதியினர், பத்திரப்பதிவு ஆணையர் அலுவலகம் மற்றும் வருவாய்த்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளனர்.

