ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிரந்தர சார் பதிவாளர் நியமிக்கப்படாததை கண்டித்தும், நாளுக்கு ஒரு அதிகாரி மாற்றப்படுவதால் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை எதிர்த்தும் பொதுமக்களும் ஆவண எழுத்தர்களும் இணைந்து அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தொடரும் அதிகாரிகளின் வருகையும் குழப்பமும்
ஆவடி பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு நிரந்தரமான பதிவுத்துறை அதிகாரி (Registrar) இதுவரை நியமிக்கப்படவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அதிகாரிகள் பொறுப்புக்கு வந்து செல்வதால், பொதுமக்கள் தங்களது ஆவணங்கள் (Documents) குறித்த சந்தேகங்களை யாரிடம் கேட்டுத் தெளிவுபறுவது என்றறியாமல் பரிதவித்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாகவே நிரந்தர சார் பதிவாளர் இல்லாமல், ஜூனியர் அசிஸ்டன்ட் மற்றும் கிளர்க்குகள் போன்ற அனுபவமற்ற அலுவலர்களைக் கொண்டு பத்திரப்பதிவு பணிகள் நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
ஆன்லைன் முறையும் நடைமுறைச் சிக்கல்களும்
தமிழ்நாடு அரசு பொதுமக்களின் வசதிக்காக ஆன்லைன் மூலமாகவே பத்திரப்பதிவு செய்துகொள்ளலாம் என்ற அரசாணையை வெளியிட்டுள்ளது. இதன் அடிப்படையில், பொதுமக்கள் ஆவணங்களைத் தயார் செய்து, வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கின்றனர்.
பணி முடிந்துவிட்டதாகக் கருதி சொத்து விற்பவர்களும் வாங்குவர்களும் சொந்த ஊர்களுக்கும் வெளிநாடுகளுக்கும் சென்றுவிட்ட நிலையில், 2 அல்லது 3 நாட்கள் கழித்து ஆன்லைனில் விண்ணப்பிக்கப்பட்ட ஆவணங்கள் ஏதேனும் சிறு பிழைகளைக் காரணம் காட்டித் திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதனால், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் உள்ளவர்கள் மீண்டும் நேரில் வந்து புதிதாகப் புகைப்படம் எடுக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்படுகிறார்கள். இந்த பெருங்குழப்பத்திற்கு அனுபவமற்ற தற்காலிக அதிகாரிகளே காரணம் என்று ஆவண எழுத்தர் சண்முகம் குற்றம்சாட்டுகிறார்.

எழும் சந்தேகங்களும் தீர்வுக்கான கோரிக்கையும்
புதியதாகப் பத்திரப்பதிவு செய்யும்போது நிலத்தின் வகைப்பாடு, பட்டா விபரங்கள், நில அளவீடு மற்றும் பட்டாவிற்கும் ஆவணத்திற்கும் உள்ள முரண்பாடுகள் போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுவது இயல்பு.
இதுகுறித்து ஆவண எழுத்தர் சண்முகம் தெரிவிக்கையில், “அனுபவம் வாய்ந்த பத்திரப்பதிவு அலுவலர் இருந்தால், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முன்பே சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவுபெற முடியும். அவ்வாறு செய்தால் ஆவணங்கள் திருப்பி அனுப்பப்பட வாய்ப்பில்லை, பொதுமக்களுக்கும் எவ்வித அலைச்சலும் இருக்காது. ஆனால், அனுபவமில்லாத தற்காலிக அலுவலர்கள் மூலமாகச் செய்யப்படும் நேரடிப் பதிவுகள்கூட 4 நாட்கள் கழித்தே குறைகூறித் திருப்பி அனுப்பப்படுகின்றன” என்றார்.
திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் எதிரொலிக்கும் பாதிப்பு

ஆவடி அலுவலகத்தில் நிலவும் இந்த அவல நிலை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 12-க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு அலுவலகங்களிலும் தொடர்வதாகக் கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, ஆவடி மற்றும் சுற்றியுள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களுக்கு நிரந்தரமான, அனுபவம் வாய்ந்த சார் பதிவாளர்களை நியமிக்க வேண்டும் என்றும், பொதுமக்களின் அலைச்சலைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.
பட்டாபிராம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதி!
