ஆவடி: “வாழ்நாள் சேமிப்பைக் கொண்டு வீடு கட்டும் நடுத்தர மக்களிடம் கடுமையாக நடந்துக்கொள்ளும் ஆவடி மாநகராட்சி நிர்வாகம், விதிகளை மீறி கட்டப்படும் பிரம்மாண்ட வணிக வளாகங்களைக் கண்டுகொள்ளாமல் மௌனம் காப்பது ஏன்?” என்ற கேள்வி தற்போது ஆவடி பகுதி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.


நடுத்தர மக்களின் தலையெழுத்தும்… மாநகராட்சியின் நோட்டீஸ்களும்!
ஆவடி மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளில், குடியிருப்பு வீடுகளைக் கட்டுவோருக்கு எதிராக நகரமைப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். மாநகராட்சி ஆணையர் சரண்யா ஐஏஎஸ் உத்தரவின்பேரில், விதிமீறல் கட்டிடங்களைக் கண்டறிய அதிகாரிகள் தொடர்ந்து நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
நடுத்தர மக்களின் வாழ்நாள் கனவாக உள்ள 600 முதல் 1,000 சதுரடி நிலத்தில் வீடு கட்டும் பொதுமக்கள் பலரும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்களைச் சந்திக்கின்றனர். முறையாக அனுமதி பெற்று, வங்கி மூலம் கடன் வாங்கும் இவர்கள், அந்தப் பணத்தை வட்டியுடன் திருப்பிச் செலுத்த 15 முதல் 20 ஆண்டுகள் வரை படாதபாடு படுகின்றனர். ஆனால், இந்த எளிய மக்களின் வாழ்வாதாரமான வீடுகட்டும்போது சிறு தவறு நடந்தாலும், தேடித்தேடி நோட்டீஸ் வழங்கும் அதிகாரிகள், வணிக நிறுவனங்களின் பக்கம் கூட திரும்புவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்துள்ளது.

பொறியாளர்களுக்கு நெருக்கடியும், இரட்டை நிலைப்பாடும்!
ஆவடி மாநகராட்சியில் பதிவுபெற்ற பொறியாளர்களுக்கு (License Surveyor) மாநகராட்சி ஆணையர் சரண்யா ஐஏஎஸ் அண்மையில் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் ஒற்றை சாளர முறை (Single Window) மற்றும் சுயசான்று முறையில் அனுமதி பெற்று வீடு கட்டிவரும் கட்டிடங்களை ஆய்வு செய்து, விதிமீறல் பட்டியலை வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலின் அடிப்படையில்தான் குடியிருப்புப் பகுதிகளுக்கு அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கி வருகின்றனர்.
ஆனால், குடியிருப்பு கட்டிடங்களுக்குக் காட்டப்படும் இந்த வேகம், அரசு விதிகளைத் தூக்கியெறிந்து கட்டப்படும் வணிக வளாகங்கள் விஷயத்தில் எங்கு செல்கிறது என்பதுதான் பொதுமக்களின் ஆதங்கமாக உள்ளது.
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் நடக்கும் பகிரங்க விதிமீறல்கள்!
ஆவடி மாநகராட்சி அலுவலகத்திற்கு மிக அருகிலும், அதிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவிலும் எந்தவித விதிமுறைகளையும் பின்பற்றாமல் வணிகக் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவது வெளிப்படையாக தெரிகிறது.
சாலை விதிமீறல்: ஆவடி – பூந்தமல்லி சாலையில் கன்னிகாபுரத்தில் கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடம், அடித்தளம் (Basement), தரைதளம் மற்றும் முதல் தளத்துடன் எழுப்பப்பட்டு வருகிறது. பொதுவாக இந்தச் சாலை 60 அடி அகலம் கொண்டது என்பதால், விதிமுறைப்படி 15 அடி இடம்விட்டு கட்ட வேண்டும். ஆனால், அங்கே எந்த விதியும் பின்பற்றப்படவில்லை; மேலும், அடித்தளத்திற்கான முறையான அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதும் சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது.
வாகன நிறுத்துமிடம் (Parking) இல்லாமை: இக்கட்டிடத்திற்கு அருகிலேயே, எவ்வித வாகன நிறுத்துமிட வசதியும் இல்லாமல் மற்றொரு வணிகக் கட்டிடம்( மயூர் மொபைல்ஸ் )கட்டி முடிக்கப்பட்டு, அண்மையில் திறப்பு விழாவும் நடத்தப்பட்டுள்ளது.
இதுபோன்று ஆவடி முழுவதும் ஏராளமான வணிக வளாகங்களும், பார்க்கிங் வசதிகள் இல்லாத திருமண மண்டபங்களும் தலைதூக்கியுள்ளன. இருப்பினும், இவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், கோரிக்கையும்!
முறையாக அனுமதி பெற்று, அனைத்துச் சட்டதிட்டங்களையும் பின்பற்றி வீடு கட்டும் சாதாரணக் குடிமகனை மட்டும் நோட்டீஸ் கொடுத்து மிரட்டும் போக்கு கண்டனத்திற்குரியது என்று பொதுமக்கள் புலம்பி வருகின்றனர். எனவே, ஆவடி மாநகராட்சி நிர்வாகம் குடியிருப்பு வாசிகளுக்கு மட்டும் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்காமல், விதிகளை மீறும் வணிக நிறுவனங்கள் மீதும் சமமான முறையில் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்திச் சுருக்கம்: ஆவடி மாநகராட்சியில் சிறிய வீடு கட்டும் நடுத்தர மக்களை நோக்கி மட்டும் பாயும் துறைசார் நோட்டீஸ்கள், கண்கெட்ட எதிரே எழும் பிரம்மாண்ட வணிக வளாகங்களின் விதிமீறல்களின் போது மட்டும் மெளனமாக இருப்பது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி மாநகராட்சியில் கட்டிட அனுமதி வழங்குவதில் காலதாமதம் – தலைமை செயலகத்தில் குவியும் புகார்கள்
