அடையாறு புற்றுநோய் மையத்திற்கு ரூ.15 லட்சம் நிதி உதவி வழங்கி வேல்டெக் கல்விக்குழுமம் நெகிழ்ச்சி!
மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடையே தீவிரமாக விதைக்கும் நோக்கில், ஆவடி வீராபுரத்தில் உள்ள வேல்டெக் தனியார் பல்கலைக்கழக வளாகத்தில் மாபெரும் விழிப்புணர்வு மாரத்தான் போட்டி உணர்ச்சிப்பூர்வமாக நடைபெற்றது.வேல்டெக் கல்விகுழுமத் தலைவர் சகுந்தலா ரங்கராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த சமூக நல நிகழ்வில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்துகொண்டு ஓடினர்.
மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டி
பங்கேற்பாளர்களின் வயது மற்றும் உடல் தகுதிக்கு ஏற்ப இந்த மாரத்தான் போட்டி 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர் மற்றும் 3 கிலோ மீட்டர் என மூன்று வெவ்வேறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்பட்டது. அடையாறு புற்றுநோய் மையத்தின் தலைமை புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் அரவிந்த் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கொடியசைத்து போட்டிகளைத் தொடக்கி வைத்தார்.

ஏழை நோயாளிகளுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி
இந்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டிக்கான பதிவுக் கட்டணம் மற்றும் நன்கொடைகள் வாயிலாக மொத்தம் ரூ.15 லட்சம் நிதி திரட்டப்பட்டது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்குப் பண வசதியின்றித் தவிக்கும் ஏழை, எளிய மக்களின் மருத்துவச் செலவுகளுக்காக, திரட்டப்பட்ட இந்த ரூ.15 லட்சத்திற்கான காசோலை அடையாறு புற்றுநோய் மைய நிர்வாகத்தினரிடம் நிகழ்ச்சியின் போது அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பெரும் ஆதரவோடு வெற்றிகரமாக நிறைவுற்ற இந்த மாரத்தான் நிகழ்வு, ஆவடி சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே ஆரம்பக்கட்ட புற்றுநோய் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்தும், ஆரோக்கியமான வாழ்வியல் முறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.
