போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து ஆதி திராவிடர் சமூகச் சான்றிதழ் பெற்றதாகக் கூறப்படும் புகாரின் பேரில், நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட T4 புதூர் காவல் நிலையப் பகுதியில் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் கடந்த 2024-ஆம் ஆண்டு மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில், தான் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர் எனக் குறிப்பிட்டு சில ஆவணங்களைச் சமர்ப்பித்து சமூகச் சான்றிதழ் பெற்றுள்ளார்.

குடியிருப்போர் சங்கப் பிரச்சினையால் வெளிவந்த உண்மை
அடுக்குமாடிக் குடியிருப்பில் வாகன நிறுத்தம் தொடர்பாகக் குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுடன் ராஜேந்திரனுக்கு தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது சமூக அடையாளத்தை முன்னிறுத்தி அவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
இதன் அடிப்படையில் T1 அம்பத்தூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் போது, ராஜேந்திரன் சமர்ப்பித்த ஆதி திராவிடர் சமூகச் சான்றிதழின் உண்மைத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்தது.
இதனைத் தொடர்ந்து, அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுவின் விசாரணைக்கு அனுப்பப்பட்டன. இந்த விசாரணையில், தனது சமூகத்தை நிரூபிப்பதற்கான போதுமான ஆதார ஆவணங்களை ராஜேந்திரன் சமர்ப்பிக்கவில்லை என்பதும், அவர் அளித்த ஆவணங்களின் அடிப்படையில் வழங்கப்பட்ட சமூகச் சான்றிதழ் நம்பகத்தன்மையற்றது என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவருக்கு வழங்கப்பட்ட சான்றிதழை ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேலும், மாதவரம் வட்டாட்சியர் அளித்த புகாரின் பேரில் T4 புதூர் காவல் நிலையத்தில் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
காவல்துறையின் கடுமையான எச்சரிக்கை:
போலி ஆவணங்களின் அடிப்படையில் சமூகச் சான்றிதழ் பெற்று, அதனைப் பயன்படுத்தி அரசின் சட்டப்பூர்வ சலுகைகளைப் பெற முயற்சிப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
