ஆவடி அடுத்த பட்டாபிராம் பஸ் நிறுத்தம் அருகே சாலையில் வழிந்தோடும் கழிவுநீரால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கழிவுநீர் பிரச்சினை
ஆவடி அடுத்த பட்டாபிராம் தேவராஜபுரம், எம்.ஜி. சாலை, பட்டாபிராம் காவலர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், சி.டி.எச். சாலை வழியாக சித்தேரியில் கலக்கிறது.
பட்டாபிராம் பஸ் நிலையம் முதல் தேவராஜபுரம் வரை மட்டுமே கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு குழாய் அமைக்கப்பட்டுள்ளதால், அடிக்கடி அடைப்பு ஏற்படுகிறது.
இதனால், பட்டாபிராம் பஸ் நிறுத்தம் அருகே அடிக்கடி கழிவுநீர் வெளியேறி துர்நாற்றம் வீசுகிறது. இந்நிலையில், கடந்த இரண்டு தினங்களாக பஸ் நிறுத்தம் அருகே சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு கழிவுநீர் சி.டி.எச். சாலையில் வழிந்தோடியது.
சுகாதார சீர்கேடு
கழிவுநீரால் சாலையில் வழுக்கும் தன்மை ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், பாதசாரிகள் கழிவுநீரில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
சாலையை ஒட்டி உணவகம், ஆஸ்பத்திரி, மருந்தகம், பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. கழிவுநீர் தேங்குவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நோய்த்தொற்று ஏற்படும் அபாயமும் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில், ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் கழிவுநீர் அடைப்பை சரிசெய்தனர். இருப்பினும், தொடர்ந்து இதுபோன்ற பிரச்சினை ஏற்பட்டு வருவதால், கழிவுநீர் கால்வாய் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாணவிகளுடன் துள்ளல் நடனம் ஆடிய வித்யா ராம்ராஜ் – தனியார் பள்ளி நிகழ்ச்சியில் உற்சாகம்!
