Homeசெய்திகள்க்ரைம்டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.60.70 லட்சம் பறிப்பு – வங்கிக் கணக்குகளை விற்ற 3 பேர்...

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.60.70 லட்சம் பறிப்பு – வங்கிக் கணக்குகளை விற்ற 3 பேர் கைது!

-

- Advertisement -

ரூ.60.70 லட்சம் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: வங்கிக் கணக்குகளை 15% கமிஷனுக்கு விற்ற 3 பேர் கைது! ரூ.1.50 கோடிக்கும் மேல் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை – 23 சைபர் புகார்கள் பதிவு; 176 புகார்களுடன் தொடர்புடைய மற்றொரு வங்கிக் கணக்கு!டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி: ரூ.60.70 லட்சம் பறிப்பு – வங்கிக் கணக்குகளை விற்ற 3 பேர் கைது!

டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி மூலம் 72 வயது முதியவரிடம் ரூ.60 லட்சத்து 70 ஆயிரம் பறிக்கப்பட்ட வழக்கில், மோசடிக்குப் பயன்படுத்த வங்கிக் கணக்குகளை 15 சதவீத கமிஷனுக்கு விற்பனை செய்ததாகக் கூறப்படும் 3 பேரை ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

இதில் ஒரு வங்கிக் கணக்கில் ரூ.1.50 கோடிக்கும் மேல் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை நடைபெற்றுள்ளதும், அந்தக் கணக்கு தொடர்பாக 23 இணையவழி குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

சென்னை ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பாடி அக்சயா காலனியைச் சேர்ந்த 72 வயது வைரவன் என்பவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்ட மோசடி கும்பல், தாங்கள் மும்பை போலீசார் என அறிமுகப்படுத்திக் கொண்டது. அவரது ஆதார் அட்டையைப் பயன்படுத்தி சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறி அவரை மிரட்டியுள்ளனர்.

மேலும், அவரிடம் உள்ள பணம் சட்டப்பூர்வமானது என்பதை நிரூபிக்க, தாங்கள் தெரிவிக்கும் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை அனுப்ப வேண்டும் என்றும், சரிபார்த்த பின்னர் அந்தப் பணம் மீண்டும் அவரது வங்கிக் கணக்கிற்கே திருப்பி அனுப்பப்படும் என்றும் நம்ப வைத்துள்ளனர்.

பணத்தை அனுப்ப மறுத்தால் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு டிஜிட்டல் அரெஸ்ட் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மிரட்டியுள்ளனர்.

இதனால் அச்சமடைந்த வைரவன், மோசடி நபர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு மொத்தம் ரூ.60 லட்சத்து 70 ஆயிரத்தை அனுப்பியுள்ளார். ஆனால், பணத்தைப் பெற்றுக்கொண்ட மோசடி நபர்கள் அதனைத் திருப்பி வழங்காமல் ஏமாற்றியுள்ளனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட வைரவன், ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு, இந்த வழக்கில் கடந்த பிப்ரவரி மாதம் இருவரைக் கைது செய்தனர். தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், புகார்தாரர் இழந்த பணத்தில் ரூ.5 லட்சம் பரிவர்த்தனை செய்யப்பட்ட வங்கிக் கணக்கின் உரிமையாளரான விழுப்புரம் மாவட்டம் தென்களவாய் பகுதியைச் சேர்ந்த கந்தவேல் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், வங்கிக் கணக்குகளைத் திறந்து, அவற்றைச் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தும் மோசடி நபர்களிடம் 15 சதவீத கமிஷனுக்கு விற்பனை செய்ய கந்தவேலுக்கு உதவியதாகக் கூறப்படும் ஏஜென்டுகளான சேலம் மாவட்டம் தெங்கவல்லியைச் சேர்ந்த வேலவன் (37), பெரம்பலூரைச் சேர்ந்த ஆறுமுகம் (54) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் சுபாஷினி தலைமையிலான போலீசார் மூவரையும் கைது செய்து, பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்களிடமிருந்து மோசடிக்குப் பயன்படுத்தப்பட்ட 2 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

போலீசார் நடத்திய விசாரணையில், கந்தவேலின் வங்கிக் கணக்கில் ரூ.1 கோடியே 50 லட்சத்திற்கும் மேல் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

மேலும், அந்த வங்கிக் கணக்கு தொடர்பாக தேசிய இணையவழி குற்றப் புகார் இணையதளத்தில் இதுவரை 23 புகார்கள் பதிவாகியுள்ளன.

அதேபோல், ஆறுமுகம் கமிஷன் தொகை தருவதாகக் கூறி பலரிடம் வங்கிக் கணக்குகளைப் பெற்று, அவற்றை மோசடி நபர்களிடம் விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர் தொடர்புடைய பிற வங்கிக் கணக்குகள் மீது இதுவரை 176 இணையவழி குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் கமிஷன் தொகைக்கு ஆசைப்பட்டு தங்களது வங்கிக் கணக்குகள், ஏடிஎம் கார்டுகள், வங்கிப் பாஸ்புக்குகள், காசோலைகள், யுபிஐ கணக்குகள் மற்றும் சிம் கார்டுகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கக் கூடாது என ஆவடி காவல் ஆணையரக இணையவழி குற்றப்பிரிவு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுபோன்ற செயல்கள் சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகளுக்கு உடந்தையாக அமையக்கூடும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரட்டூரில் வாட்ஸ்அப் மூலம் போதைப்பொருள் விற்பனை: 3,500 போதை மாத்திரைகள், ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் – 26 வயது இளைஞர் கைது!

MUST READ