திருவள்ளூரில் மது பழக்கத்திற்கு அடிமையான இளைஞர் ஒருவர், ஏடிஎம் மையம் உள்ளிட்ட நான்கு இடங்களில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 பேட்டரிகளைத் திருடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், இளைஞரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில், திருவள்ளூர் தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ஹிட்டாச்சி ஏடிஎம் மையம், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி, தனியார் புகைப்படக் கூடம் மற்றும் தனியார் மருத்துவமனை உள்ளிட்ட நான்கு இடங்களில் தொடர்ந்து பேட்டரிகள் திருடுபோனதாக போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தன.
இதையடுத்து திருவள்ளூர் நகர போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஹிட்டாச்சி ஏடிஎம் மையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளைஞர் ஒருவர் பையுடன் ஏடிஎம் மையத்திற்குள் நுழைவது பதிவாகியிருந்தது. கதவைத் திறந்து உள்ளே சென்ற அவர், ஏடிஎம் இயந்திரத்திற்கான பேட்டரிகளின் இணைப்புகளைத் துண்டித்து, அவற்றைச் சாக்குப் பையில் வைத்துள்ளார்.
பின்னர் பேட்டரிகளைத் தூக்கிச் செல்ல முடியாமல், சாக்குப் பையை ஏடிஎம் மையத்திலிருந்து வெளியே இழுத்துச் செல்லும் காட்சிகளும் பதிவாகியிருந்தன.
இந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில், பேட்டரிகளைத் திருடியது திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய எடப்பாளையம் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய விமல் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவரைக் கைது செய்து விசாரணை நடத்திய போலீசார், நான்கு இடங்களில் இருந்து சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான 21 பேட்டரிகளைத் திருடியிருப்பது கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து 6 பேட்டரிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருடிய பேட்டரிகளைப் பழைய இரும்புக் கடையில் விற்பனை செய்து, கிடைத்த பணத்தில் மதுபானம் அருந்தியதாக விமல் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருவள்ளூர் கிளைச் சிறையில் அடைத்தனர்.
சென்னையில் வங்கிகளை குறிவைத்து தொடர் மோசடி – தூத்துக்குடியில் பதுங்கியிருந்த 4 பேர் கைது!
