சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு அமெரிக்க டாலர் கரன்சியை நூதனமான முறையில் கடத்த முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ரூ.19 லட்சம் இந்திய மதிப்பிலான அமெரிக்க டாலர்களைப் பறிமுதல் செய்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள், அவற்றைக் கொண்டு வந்த தனியார் நிறுவன ஒப்பந்த ஊழியரைக் கைது செய்து சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சென்னை விமான நிலையம் டெர்மினல் 2 புறப்பாடு பகுதியில் இருந்து இன்று காலை துபாய் செல்லும் தனியார் பயணிகள் விமானம் புறப்படத் தயாராக இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணிகள் சுங்கச் சோதனை, குடியுரிமைச் சோதனை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் முடித்துவிட்டு, விமானத்தில் ஏறுவதற்காக மேல்தளத்திற்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சென்னை விமான நிலையத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் சுஹைப் (23) என்பவர், சந்தேகத்திற்கிடமான வகையில் பையுடன் அங்கு நின்று கொண்டிருந்தார். இதைக் கவனித்த பாதுகாப்புப் பணியில் இருந்த அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அன்றைய தினம் அவருக்குப் பணி ஒதுக்கப்படாத நிலையில், விமான நிலையத்தில் எதற்காக வந்துள்ளார் என அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததாகக் கூறப்படுகிறது.
இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவர் வைத்திருந்த பையைச் சோதனையிட்டனர். அப்போது அதனுள் கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் கரன்சிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து சுஹைப்பை விமான நிலையத்தில் உள்ள தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க டாலர்களை எண்ணிப் பார்த்தபோது, அவற்றின் இந்திய மதிப்பு சுமார் ரூ.19 லட்சம் என்பது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுங்கச் சோதனை உள்ளிட்ட நடைமுறைகளை முடித்துவிட்டு துபாய் செல்லத் தயாராக இருந்த பயணி ஒருவரிடம், விமானத்தில் ஏறும் இடத்தில் இந்தப் பணத்தை ஒப்படைப்பதற்காக சுஹைப் காத்திருந்ததாகத் தெரியவந்தது.
வெளிநாடுகளுக்கு ஹவாலா பணத்தைக் கடத்தும் கும்பல், பண ஆசை காட்டி அவரை இந்தச் செயலுக்குப் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் விசாரணையில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து ரூ.19 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்களையும், பிடிபட்ட ஒப்பந்த ஊழியர் சுஹைப்பையும் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் மேல் நடவடிக்கைக்காக சுங்கத்துறையிடம் ஒப்படைத்தனர்.
சுங்கத்துறை அதிகாரிகள் சுஹைப்பைக் கைது செய்து, அவரிடம் அமெரிக்க டாலர்களைக் கொடுத்தது யார்? துபாய் செல்லவிருந்த எந்தப் பயணியிடம் அவற்றை ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தார்? இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச ஹவாலா கும்பலுக்குத் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் சோதனை நடைமுறைகளைக் கடந்து, விமானத்தில் ஏறும் பகுதியில் வெளிநாட்டு கரன்சியை ஒப்படைக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
