ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டை அடுத்த தென்கடப்பந்தாங்கல் விஐபி சிட்டி அருகே வசித்து வந்தவர் கீதா. இவரது கணவர் சென்னையில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். கீதாவிற்கு இரண்டு மகள்கள் உள்ள நிலையில், ஒரு மகள் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
மூத்த மகளான சரண்யா, தனியார் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். கணவரைப் பிரிந்த சரண்யா, தனது இரண்டு குழந்தைகளுடன் தாய் கீதாவுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 19ஆம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த சரண்யாவின் மகன் சக்தி, தனது பாட்டி கீதா பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வாலாஜா காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கீதாவின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், வீட்டில் இருந்த 10 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதையடுத்து, கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், குற்றவாளிகளைக் கண்டறிய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே, கீதாவின் மகள் சரண்யாவிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கீதாவிற்குச் சொந்தமான 30 சவரன் தங்க நகைகளைத் தனது தேவைக்காக அடகு வைக்க சரண்யா கேட்டதாகவும், அதற்கு கீதா மறுப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறிய நிலையில், ஆத்திரமடைந்த சரண்யா தனது தாயைத் தாக்கி கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாகக் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், கொலைக்குப் பிறகு மர்ம நபர்கள் வீட்டிற்குள் புகுந்து நகை, பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிட்டு, வழக்கம்போல் பள்ளிக்குச் சென்றதாகவும் கூறப்படுகிறது. மாலையில் தாயார் உயிரிழந்த செய்தியைக் கேட்டு அதிர்ச்சியடைந்தது போல் சரண்யா நாடகமாடியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, சரண்யாவின் கள்ளக்காதலன் எனக் கூறப்படும் சரண்ராஜ் என்பவரையும் காவல்துறையினர் அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும், இந்தக் கொலைச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இல்லை எனக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெற்ற தாயையே நகைக்காக மகள் கொலை செய்ததாக வெளியாகியுள்ள தகவல் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
