நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே சேரம்பாடி பகுதியில் காரில் ரகசிய அறை அமைத்து பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடியே 14 லட்சம் பணத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்தப் பணம் ஹவாலா பணமா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பணத்துடன் காரில் சென்ற இருவரைக் கடத்திச் சென்றதாகக் கூறப்படும் கேரளாவைச் சேர்ந்த 6 பேரை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
தமிழகம் – கேரளா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள கூடலூர் அருகே சேரம்பாடி வழியாக, மூன்று நாட்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த முகமது ஷெரிப் மற்றும் அப்துல் கரீம் ஆகிய இருவர் காரில் பணத்துடன் கேரளா நோக்கிச் சென்றுள்ளனர். அப்போது சோலாடி சோதனைச்சாவடி அருகே காரை வழிமறித்த 6 பேர் கொண்ட கும்பல், முகமது ஷெரிப் மற்றும் அப்துல் கரீம் ஆகிய இருவரையும் மற்றொரு காரில் கடத்திச் சென்றதுடன், அவர்கள் வந்த காரையும் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இரண்டு கார்களும் வேகமாகச் சென்றதைக் கண்டு சந்தேகமடைந்த தமிழக போலீசார் அவற்றைப் பிடிக்க முயன்றுள்ளனர். ஆனால், அந்தக் கும்பல் போலீசாரிடம் சிக்காமல் கேரளப் பகுதிக்குள் தப்பிச் சென்றுள்ளது. பின்னர், கடத்தப்பட்டதாகக் கூறப்படும் இருவரையும் காரிலிருந்து இறக்கிவிட்டுவிட்டு, அவர்களுக்குச் சொந்தமான காரை மட்டும் அந்தக் கும்பல் எடுத்துச் சென்றுள்ளது.
இதுதொடர்பாக முகமது ஷெரிப் மற்றும் அப்துல் கரீம் ஆகியோர் தேவாலா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தங்களது காரில் ரூ.45 லட்சம் பணம் இருந்ததாகவும், 6 பேர் கொண்ட கும்பல் தங்களை வழிமறித்துத் தாக்கி கடத்தியதுடன், கார் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தேவாலா பொறுப்பு துணைக் காவல் கண்காணிப்பாளர் சுந்தரேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்பட்ட கார் கேரளாவில் வைத்து தேவாலா போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் அந்தக் கார் சேரம்பாடி காவல் நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சோதனை செய்யப்பட்டது.
அப்போது காருக்குள் ரகசிய அறை ஒன்று அமைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டறிந்தனர். அந்த அறையைத் திறந்து சோதனை செய்தபோது அதற்குள் கூடுதல் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. புகாரில் காரில் ரூ.45 லட்சம் மட்டுமே இருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், போலீசார் நடத்திய சோதனையில் மொத்தம் ரூ.1 கோடியே 14 லட்சம் பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
புகாரில் தெரிவிக்கப்பட்ட தொகைக்கும், காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட தொகைக்கும் இடையே பெரிய வித்தியாசம் இருப்பதால் போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதனால், காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பணம் ஹவாலா பணமா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும், கடத்தல் மற்றும் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேரின் அடையாளம் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ள நிலையில், அவர்களைக் கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடியே 14 லட்சம் பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், அந்தப் பணத்தை வருமான வரித்துறையிடம் ஒப்படைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
தேடப்பட்டு வரும் 6 பேரும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே, பணத்தின் பின்னணி மற்றும் கடத்தல் சம்பவம் தொடர்பான முழுமையான விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
