விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களது பணத்தை மீட்டுத் தர வேண்டும் என்றும் வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திண்டிவனம் – திருவண்ணாமலை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த சாலை கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர்புத்திரன். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களை முகவர்களாக நியமித்து, பொதுமக்களிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுகிறது.
அவ்வாறு முதலீடு செய்யும் பணத்தைப் பல மடங்காகத் திருப்பித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, கோடிக்கணக்கில் பணம் வசூலித்துவிட்டு தலைமறைவாகிவிட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், உரிய நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகக் கூறி பாதிக்கப்பட்ட 100-க்கும் மேற்பட்டோர், சங்கர்புத்திரனின் சொந்த ஊரான சாலை கிராமத்திற்குச் சென்று அவரது வீட்டில் விசாரித்துள்ளனர்.
அப்போது அவர் வீட்டில் இல்லாததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், திண்டிவனம் – திருவண்ணாமலை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அந்த வழியாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் காரில் சென்றபோது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அமைச்சரின் காரை மறிக்க முயன்றனர். இருப்பினும், அமைச்சரின் கார் நிற்காமல் சென்றது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திண்டிவனம் காவல் துணைக் கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
புகார் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
