தமிழ்நாட்டில் தங்கக் கடத்தலைத் தடுக்கும் நடவடிக்கையாக மத்திய அரசின் வருவாய் புலனாய்வுத் துறையான DRI அதிகாரிகள் புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே அதிரடி சோதனை நடத்தி, 1.75 கிலோ தங்கக் கட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.
இது கடந்த ஒரு மாதத்தில் தமிழ்நாட்டில் DRI மேற்கொண்ட ஐந்தாவது வெற்றிகரமான சோதனை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து திருச்சி வழியாக சென்னைக்கு தங்கம் கடத்திச் செல்லப்படுவதாக DRI அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அருகே கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், சந்தேகத்திற்கிடமான காரை மறித்து சோதனை நடத்தினர். அப்போது, அதில் கடத்திச் செல்லப்பட்ட 1.75 கிலோ தங்கக் கட்டிகள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.
முதற்கட்ட விசாரணையில், இலங்கையில் இருந்து கடல் வழியாகக் கடத்தி வரப்பட்ட தங்கம் என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியைச் சேர்ந்த சையது நபி கான் என்பவரை DRI அதிகாரிகள் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக தமிழ்நாட்டில் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ள DRI அதிகாரிகள், ஏற்கனவே மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள், ஹெராயின் மற்றும் செம்மரக் கடத்தல் தொடர்பான நடவடிக்கைகளில் பறிமுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தற்போது கடத்தல் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடத்தல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் DRI அதிகாரிகள் தொடர்ந்து சோதனைகள் மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரூ.2.64 கோடி வங்கி மோசடி வழக்கில் பெண் கைது – ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை!
