போலி நகைகளை அடமானம் வைத்து மோசடி – சென்னையில் 25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் கைவரிசை காட்டிய கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது
சென்னையில் போலி தங்க நகைகளை அடமானம் வைத்து தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கும்பலைச் சேர்ந்த 4 பேரை வடபழனி தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னையில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டதாகவும், போலி ஆதார் அட்டைகள் மற்றும் சொத்து ஆவணங்களைத் தயாரித்து வங்கிகளில் கடன் பெற்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்திற்கு கடந்த மாதம் 5-ம் தேதி டிப்டாப் உடையணிந்து வந்த சூளைமேடு பகுதியைச் சேர்ந்த டில்லிபாபு (20) என்பவர், சுமார் 50 கிராம் எடையுள்ள 6 பவுன் தங்கச் சங்கிலியை அடமானமாகக் கொடுத்துள்ளார்.
அந்த நகை தனது சொந்தப் பணத்தில் வாங்கிய 22 காரட் சுத்தத் தங்கம் எனக் கூறி, நகை மதிப்பீட்டு உறுதிமொழிப் பத்திரத்திலும் கையொப்பமிட்டு ரூ.4 லட்சத்து 67 ஆயிரம் பணத்தைப் பெற்றுச் சென்றுள்ளார்.
இரண்டு நாட்களுக்குப் பிறகு, நிதி நிறுவனத்தின் தணிக்கைப் பிரிவு ஊழியர்கள் அடமானம் வைக்கப்பட்ட நகைகளைச் சரிபார்த்தபோது, டில்லிபாபு கொடுத்த தங்கச் சங்கிலி போலியானது என்பது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த நிதி நிறுவனத்தின் மண்டல மேலாளர் சந்தோஷ்குமார், இதுகுறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
தூத்துக்குடியில் பதுங்கியிருந்த கும்பல் கைது
புகாரின் அடிப்படையில் போலீசார் கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் போலி நகைகளை அடமானம் வைத்து மோசடியில் ஈடுபட்ட கும்பல் தூத்துக்குடியில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அங்கு விரைந்த வடபழனி தனிப்படை போலீசார், திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையைச் சேர்ந்தவரும் சூளைமேட்டில் வசித்து வந்தவருமான டில்லிபாபு (20), தூத்துக்குடியைச் சேர்ந்த தியாகராய நகரில் வசிக்கும் பிரவீன் (29), பொன்ரகு (26), கோடம்பாக்கத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் என்ற லோகேஷ் (24) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை வடபழனி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில், இந்த மோசடிக் கும்பலின் முக்கிய மூளையாக பிரவீன் செயல்பட்டதும், டில்லிபாபு இடைத்தரகராக இருந்து மோசடி நடவடிக்கைகளுக்கு உதவியதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்டவர்களில் பிரவீன் மற்றும் பொன்ரகு மீது ஏற்கெனவே பல்வேறு மோசடி வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறினர்.
25-க்கும் மேற்பட்ட வங்கிகளில் மோசடி
அரசு மற்றும் தனியார் வங்கிகள், தனியார் நகைக்கடன் நிறுவனங்கள் என சென்னையில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலி ஆதார் அட்டைகள் மற்றும் போலியாகத் தயாரிக்கப்பட்ட சொத்துப் பத்திரங்களைப் பயன்படுத்தி வங்கிகளில் கடன் பெற்றும் மோசடி செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
மோசடி மூலம் கிடைத்த பணத்தில் ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததாகக் கைது செய்யப்பட்டவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். இந்த மோசடியில் வங்கி அதிகாரிகள் அல்லது வேறு நபர்களுக்குத் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
