ஆரணி அருகே பள்ளி முடிந்து வீட்டிற்குச் சென்ற 8-ம் வகுப்பு மாணவனை, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்றதாக எழுந்துள்ள புகார் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவனின் தந்தை சிசிடிவி காட்சிகளுடன் ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த அரியப்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் 13 வயது மகன் நியாஷ், அப்பகுதியில் உள்ள குன்னத்தூர் அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று பள்ளி முடிந்து மாணவன் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது குன்னத்தூர் கூட்ரோடு அருகே குருமந்தாங்கல் செல்லும் சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் மாணவனை வழிமறித்துள்ளார்.
பின்னர், “உங்கள் அம்மாதான் உன்னை அழைத்து வரச் சொன்னார்” எனக் கூறி, தன்னுடன் இருசக்கர வாகனத்தில் வருமாறு அழைத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த மாணவன், அந்த நபருடன் செல்லாமல் அங்கிருந்து வேகமாக ஓடியுள்ளார். இருப்பினும், மர்ம நபர் இருசக்கர வாகனத்தில் மாணவனைத் துரத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த மாணவன், குன்னத்தூர் கூட்ரோடு அருகே இருந்த எலக்ட்ரிக் கடைக்குள் சென்று தஞ்சமடைந்துள்ளார். அங்கு கடைக்காரரிடம் மர்ம நபர் ஒருவர் தன்னை இருசக்கர வாகனத்தில் துரத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். மாணவன் கடைக்குள் சென்றதை அறிந்த அந்த மர்ம நபர், அங்கிருந்து இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, மாணவனின் உறவினர் ஒருவர் சம்பவ இடத்திற்கு வந்து அவரைப் பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து தகவலறிந்த மாணவனின் தந்தை ஆறுமுகம், சம்பவம் நடைபெற்ற பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துள்ளார்.
அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், தனது மகனைக் கடத்த முயன்றதாக ஆரணி கிராமிய காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பட்டப்பகலில் பள்ளி மாணவனை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கடத்த முயன்றதாக எழுந்துள்ள புகார் ஆரணி பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை அடையாளம் கண்டு, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
