செல்போனில் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோனைப் பயன்படுத்தி, சம்பந்தப்பட்ட நபருக்கே தெரியாமல் அவர்களைக் கண்காணித்து வீடியோ பதிவு செய்யும் சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், சென்னையில் குழந்தைகளைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பேரண்டல் கண்ட்ரோல் (Parental Control) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பெண் ஒருவரை ரகசியமாகக் கண்காணித்து வீடியோ எடுத்த நபரை செம்பியம் போலீசார் கைது செய்துள்ளனர்.
செல்போன் பேட்டரி அருகே நீலம், ஆரஞ்சு, பச்சை உள்ளிட்ட வண்ணங்களில் புள்ளிகள் தோன்றினால் அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதைப் பொதுமக்கள் கவனிக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும் இந்தச் சம்பவம் ஏற்படுத்தியுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்ப புதிய தொழில்நுட்ப வசதிகளும் அறிமுகமாகி வருகின்றன. தகவல் தொடர்பு, வங்கி பரிவர்த்தனை, பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்கு உதவும் செல்போன்கள், சில நேரங்களில் சைபர் குற்றவாளிகளால் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, செல்போனில் உள்ள கேமரா, மைக்ரோஃபோன் மற்றும் கண்காணிப்பு வசதிகளைப் பயன்படுத்தி, பயனர்களுக்குத் தெரியாமலேயே அவர்களின் தனிப்பட்ட நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், சென்னை வியாசர்பாடியில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் வசித்து வரும் 40 வயது பெண் ஒருவரின் செல்போனை ரகசியமாகக் கண்காணித்து, அவரை வீடியோ பதிவு செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அந்தப் பெண்ணின் கணவர் பெரம்பூர் பகுதியில் தங்க நகைக்கடை நடத்தி வருகிறார்.
அங்கு கடந்த 8 ஆண்டுகளாக மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த கணேஷ் என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினருக்கு அறிமுகமானவர் என்பதால் வீட்டின் மொட்டை மாடியிலும் தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி, தனது செல்போனில் ஸ்கிரீன் கார்டு ஒட்டுவதற்காக அந்தப் பெண் கணேஷிடம் கொடுத்துள்ளார். அப்போது செல்போனின் கடவுச்சொல்லையும் கணேஷ் கேட்டுப் பெற்றுள்ளார்.
வழக்கமாக ஸ்கிரீன் கார்டு ஒட்டுவதற்கு கடவுச்சொல் தேவையில்லாத நிலையில், அவர் திட்டமிட்டு கடவுச்சொல்லைக் கேட்டுப் பெற்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதற்கிடையே, சில நாட்களாக அந்தப் பெண்ணின் செல்போனில் செயலிகள் சரிவர இயங்காமல் இருந்ததுடன், பேட்டரி அருகே வண்ணப் புள்ளிகளும் தோன்றியுள்ளன. இதனால் சந்தேகமடைந்த அவர், தனது மகளிடம் செல்போனைக் கொடுத்து ஆய்வு செய்யக் கேட்டுள்ளார்.
அப்போது, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பேரண்டல் கண்ட்ரோல் (Parental Control) தொழில்நுட்பம் செல்போனில் செயல்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
மேலும், அந்தத் தொழில்நுட்பத்தில் வேறொரு நபரின் மின்னஞ்சல் முகவரி பதிவு செய்யப்பட்டிருந்ததும், அதன் மூலம் அந்தப் பெண்ணின் செல்போன் நடவடிக்கைகள் மற்றொரு செல்போனில் கண்காணிக்கப்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, தொழில்நுட்ப ரீதியாக ஆய்வு செய்தபோது, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனை அவரது கணவரின் நகைக்கடையில் பணிபுரியும் கணேஷ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண் செம்பியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செல்போன்களைப் பறிமுதல் செய்த போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியுடன் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். அதில் கணேஷ் என்கிற பிரதமேஷ் மேத்கரி இந்தச் செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரைக் கைது செய்தனர்.
போலீசாரின் விசாரணையில், குழந்தைகளைக் கண்காணிப்பதற்காக ஆண்ட்ராய்டு செல்போன்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போனில் உள்ள கேமரா மற்றும் மைக்ரோஃபோன் உள்ளிட்டவற்றைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
குறிப்பாக, இந்தத் தொழில்நுட்பத்தில் சில வசதிகளைப் பயன்படுத்துவதற்கு சந்தா செலுத்த வேண்டியிருப்பதாகவும், இந்திய மதிப்பில் சுமார் 2,000 ரூபாய் செலுத்தி அந்த வசதியைப் பெற்றதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் கடந்த ஆறு மாதங்களாக அந்தப் பெண்ணுக்குத் தெரியாமலேயே அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்து வீடியோ பதிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆபாசமான முறையிலும் வீடியோக்களைப் பதிவு செய்ததாகவும், அவை கணேஷின் செல்போனில் இருந்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து வெளியே தெரிவித்தால் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாகக் கணேஷ் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
மேலும், விசாரணையின்போது யூடியூப் வீடியோக்களைப் பார்த்து ஹேக்கிங் தொடர்பான தொழில்நுட்பங்களைக் கற்றுக்கொண்டதாகவும், குழந்தைகளைக் கண்காணிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பேரண்டல் கண்ட்ரோல் வசதிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை அறிந்து இந்தக் குற்றத்தில் ஈடுபட்டதாகவும் கணேஷ் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட கணேஷ் என்கிற பிரதமேஷ் மேத்கரி மீது தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவரிடமிருந்து குற்றச் செயலுக்குப் பயன்படுத்திய மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் தடயவியல் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. இதேபோன்று வேறு பெண்களையும் அவர் ரகசியமாக வீடியோ பதிவு செய்துள்ளாரா? வேறு ஏதேனும் சைபர் குற்றங்களில் ஈடுபட்டுள்ளாரா? என்பது குறித்துப் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட கணேஷ் என்கிற பிரதமேஷ் மேத்கரி, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
பொதுமக்கள் கவனத்திற்கு:
ஆண்ட்ராய்டு செல்போன்களில் கேமரா அல்லது மைக்ரோஃபோன் பயன்படுத்தப்படும்போது பச்சை நிறக் குறியீடு தோன்றுவது வழக்கம். சில ஐபோன்களில் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறக் குறியீடுகள் தோன்றும்.
இவை மட்டும் செல்போன் ஹேக் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் அல்ல. இருப்பினும், எதிர்பாராத நேரங்களில் இந்தக் குறியீடுகள் தோன்றினால் எந்தச் செயலி கேமரா அல்லது மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது என்பதைச் சரிபார்க்க வேண்டும். தேவையற்ற செயலிகளின் அனுமதிகளை நீக்கி, சந்தேகத்திற்கிடமான செயலிகள் மற்றும் மின்னஞ்சல் கணக்குகள் குறித்து ஆய்வு செய்வது அவசியம்.
செல்போனைப் பழுதுபார்க்கவோ, ஸ்கிரீன் கார்டு ஒட்டவோ கொடுக்கும்போது தேவையற்ற கடவுச்சொற்களைப் பகிர்வதையும் தவிர்க்க வேண்டும்.
