வெளிநாடுகளில் இருந்து இணையவழியாக வரும் தொலைபேசி அழைப்புகளை, இந்திய உள்ளூர் செல்போன் எண்களில் இருந்து வருவது போன்று மாற்றி சட்டவிரோதமாகச் செயல்பட்டதாகக் கூறப்படும் சிம் பாக்ஸ் மோசடி தொடர்பாக சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய இருவரை தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 10 சிம் பாக்ஸ் கருவிகள், 182 சிம் கார்டுகள் உள்ளிட்ட ஏராளமான மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தியா முழுவதும் இந்த மோசடி தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் கிடைத்துள்ளதாகவும், அவற்றில் 52 புகார்கள் தமிழகத்தைச் சேர்ந்தவை என்றும் மாநில சைபர் கிரைம் பிரிவு கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் தெரிவித்துள்ளார்.

சைதாப்பேட்டை தனியார் நிறுவனத்தில் அதிரடி சோதனை
சென்னை சைதாப்பேட்டையில் செயல்பட்டு வரும் Forte Management Service என்ற தனியார் நிறுவனம், வங்கிகளில் கடன் மற்றும் கிரெடிட் கார்டு கடன் பெற்று தவணைகளைச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் இருந்து தொகையை வசூலிக்கும் பணியில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிறுவனத்தில் சிம் பாக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி அனுமதியற்ற தொலைத்தொடர்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக, மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறையின் தமிழ்நாடு உரிமம் பெற்ற சேவைப் பகுதியிலிருந்து சைபர் கிரைம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில் தொலைத்தொடர்புத் துறையினரும் தமிழக சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து அந்த நிறுவனத்தில் சோதனை நடத்தினர். அப்போது பல சிம் கார்டுகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தக்கூடிய அங்கீகாரமற்ற தொலைத்தொடர்பு அமைப்பு செயல்பட்டு வந்தது கண்டறியப்பட்டது. உரிய அதிகார அமைப்புகளிடம் இருந்து தேவையான உரிமம் அல்லது அனுமதி பெறாமல் இந்தக் கருவிகள் இயக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
10 சிம் பாக்ஸ் கருவிகள், 182 சிம் கார்டுகள் பறிமுதல்
சோதனையின்போது 10 சிம் பாக்ஸ் கருவிகள், இரண்டு சிபியுக்கள், இரண்டு சர்வர்கள், 182 சிம் கார்டுகள் உள்ளிட்ட டிஜிட்டல் மற்றும் மின்னணு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி நிறுவனத்தின் மேலாளர் சீனிவாசன் மற்றும் டெக்னீசியன் சஞ்சய் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ளதாகக் கூறப்படும் நிறுவன உரிமையாளர் சதீஷைத் தேடி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் மோசடி உள்ளிட்ட நான்கு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சிம் பாக்ஸ் மோசடி என்றால் என்ன?
சிம் பாக்ஸ் என்பது ஒரே கருவியில் ஏராளமான சிம் கார்டுகளைப் பொருத்தி, அவற்றின் மூலம் தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளவும், அழைப்புகளை வழிமாற்றவும் பயன்படுத்தப்படும் மின்னணுக் கருவியாகும்.
வெளிநாடுகளில் இருந்து இணையவழித் தொலைபேசி சேவை மூலம் வரும் அழைப்புகளை, இந்தியாவில் உள்ள சிம் கார்டுகள் வழியாக உள்ளூர் அழைப்புகளாக மாற்றி அனுப்புவது இந்த மோசடியின் முக்கியச் செயல்முறையாகும்.
இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து அழைக்கும் நபர்களின் உண்மையான அடையாளம் மற்றும் இருப்பிடத்தை மறைத்து, இந்திய மொபைல் எண்ணிலிருந்து அழைப்பு வருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முடியும்.
இதனைப் பயன்படுத்தி மோசடி கும்பல்கள் வங்கி அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் எனக் கூறி பொதுமக்களைத் தொடர்புகொண்டு பணம் பறித்தல், ஆன்லைன் முதலீட்டு மோசடி உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும், அனுமதியற்ற தொலைத்தொடர்பு வழித்தடங்களைப் பயன்படுத்துவதால் சர்வதேச அழைப்புகளுக்கான உரிய கட்டண வருவாயும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.
இந்தியா முழுவதும் 300 புகார்கள் – தமிழகத்தில் 52
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மாநில சைபர் கிரைம் பிரிவு கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம், டெல்லியில் செயல்படும் இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையத்துடன் தமிழக சைபர் கிரைம் பிரிவு தொடர்ந்து தகவல்களைப் பரிமாறி வருவதாகக் கூறினார்.
நாடு முழுவதும் பதிவாகும் இணையவழிக் குற்றங்கள் குறித்து அந்த மையம் ஆய்வு செய்து, மாநில காவல்துறையினருக்கு அவ்வப்போது தகவல்களை வழங்குவதாகவும், அவற்றின் அடிப்படையில் சோதனைகள் மற்றும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இந்த வழக்கிலும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், தொலைத்தொடர்புத் துறையுடன் இணைந்து விசாரணை நடத்தி குறிப்பிட்ட நிறுவனத்தைக் கண்டறிந்து சோதனை மேற்கொண்டதாகக் கூறினார்.
இந்தியா முழுவதும் 300-க்கும் மேற்பட்ட புகார்கள் தொடர்புடைய தொலைபேசி எண்கள் ஆய்வு செய்யப்பட்டதாகவும், அவற்றில் 52 புகார்கள் மட்டுமே தமிழகத்தைச் சேர்ந்தவை என்றும் தெரிவித்தார். மற்ற புகார்கள் பிற மாநிலங்களைச் சேர்ந்தவை என்பதால், அந்தந்த மாநிலங்களுடன் இணைந்து விசாரணை நடத்த வேண்டியுள்ளதாகவும் கூறினார்.
சிறுமிகளின் அந்தரங்கப் படங்கள் தொடர்பாகவும் விசாரணை
இந்த வழக்கில் கைப்பற்றப்பட்ட கணினிகள், சர்வர்கள் மற்றும் டிஜிட்டல் சாதனங்களை ஆய்வு செய்து வருவதாகத் தெரிவித்த செல்வ நாகரத்தினம், நிறுவனத்தில் பணியாற்றியவர்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரணை நடைபெறுவதாகக் கூறினார்.
மின்னணு சாதனங்கள் மற்றும் கிடைத்துள்ள புகார்களின் அடிப்படையில் சிறுமிகளின் அந்தரங்கப் படங்கள் தொடர்பான சைபர் குற்றங்களிலும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரித்து வருவதாகத் தெரிவித்தார்.
இந்தியா முழுவதும் கிடைத்துள்ள புகார்களில் பண இழப்பு மற்றும் அந்தரங்கக் காணொளிகள் தொடர்பான புகார்களும் இருப்பதாகக் கூறிய அவர், தமிழகத்தில் உள்ள 52 புகார்தாரர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். கைப்பற்றப்பட்ட கணினிகள் மற்றும் சர்வர்களின் ஆய்வு முடிந்த பின்னரே, சம்பந்தப்பட்டவர்கள் எந்தெந்த மோசடிகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது முழுமையாகத் தெரியவரும் என்றும் விளக்கினார்.
படித்தவர்கள் மட்டுமின்றி முதியவர்களும் சைபர் மோசடிகளில் பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததும் இதுபோன்ற மோசடிகளுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்றார்.
கைது குறித்து நிறுவனத் தரப்பில் மறுப்பு
இதற்கிடையே, தங்களது நிறுவனத்தில் இருவர் கைது செய்யப்பட்டதற்கான காரணத்தை சைபர் கிரைம் போலீசார் முறையாகத் தெரிவிக்கவில்லை என நிறுவனத்தின் மேலாளர் கணேஷ் கூறியுள்ளார்.
முறையாக வாங்கப்பட்ட சிம் பாக்ஸ் கருவிகளைப் பயன்படுத்தி, வங்கிகளில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாத வாடிக்கையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் கலெக்ஷன் ஏஜென்சி பணியையே நிறுவனம் மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் சிம் பாக்ஸ் கருவிகள் மூலம் சட்டவிரோத தொலைத்தொடர்பு மற்றும் சைபர் மோசடி நடைபெற்றதாகக் காவல்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில், மறுபுறம் நிறுவனத் தரப்பில் கருவிகள் முறையாகப் பெறப்பட்டவை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் சாதனங்களின் ஆய்வு மற்றும் தொடர்ந்து நடைபெறும் விசாரணையின் முடிவிலேயே இந்த விவகாரத்தின் முழு பின்னணி தெரியவரும்.
