Homeசெய்திகள்க்ரைம்முதல் மாத சம்பளத்தில் வாங்கிய லட்டுவை ஆதரவற்றோருக்கு வழங்கிய பெண்! பெப்பர் ஸ்பிரே அடித்து செயின்...

முதல் மாத சம்பளத்தில் வாங்கிய லட்டுவை ஆதரவற்றோருக்கு வழங்கிய பெண்! பெப்பர் ஸ்பிரே அடித்து செயின் பறிக்க முயன்ற ஐ.டி. ஊழியர்

-

- Advertisement -

லட்டு வாங்கியவர்களே மடக்கிப் பிடித்த நெகிழ்ச்சி சம்பவம்!முதல் மாத சம்பளத்தில் வாங்கிய லட்டுவை ஆதரவற்றோருக்கு வழங்கிய பெண்! பெப்பர் ஸ்பிரே அடித்து செயின் பறிக்க முயன்ற ஐ.டி. ஊழியர்

முதல் மாத சம்பளத்தில் வாங்கிய லட்டுவை தாம்பரம் சானடோரியம் பேருந்து நிலைய நடைமேம்பாலத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஆதரவற்றவர்களுக்கு வழங்கிய இளம்பெண்ணிடம், பெப்பர் ஸ்பிரே அடித்து 3 சவரன் தங்கச் செயினைப் பறிக்க முயன்ற நபரை, அந்த ஆதரவற்றவர்களும் பொதுமக்களும் சேர்ந்து மடக்கிப் பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

ஆன்லைன் டிரேடிங்கில் பல லட்சம் ரூபாயை இழந்து, ரூ.60 லட்சம் மதிப்பிலான வீட்டை விற்றும் கடன் பிரச்சினை தீராததால், முதல் முறையாக செயின் பறிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் ஐ.டி. ஊழியர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

முதல் மாத சம்பளத்தில் ஆதரவற்றவர்களுக்கு லட்டு வழங்கிய இளம்பெண்!

சென்னை தாம்பரம் அடுத்த சிட்லபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் புவனேஸ்வரி (24). எம்.பி.ஏ. படிப்பை முடித்த இவர், தாம்பரத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் கடந்த ஒரு மாதமாகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், வழக்கம்போல் வேலை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காக தாம்பரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்தில் ஏறியுள்ளார். பின்னர் தாம்பரம் சானடோரியம் பகுதியில் உள்ள அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இறங்கிய அவர், அங்கிருந்து சாலையைக் கடந்து தனது தந்தையுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் செல்வது வழக்கம்.

அதன்படி, பேருந்தில் இருந்து இறங்கிய புவனேஸ்வரி, நடைமேம்பாலம் வழியாகச் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு தூங்கிக் கொண்டிருந்த உறவினர்களால் கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற சிலரைப் பார்த்துள்ளார்.

தான் வேலைக்குச் சேர்ந்து முதல் மாத சம்பளம் பெற்றிருந்ததால், அந்தச் சம்பளத்தில் லட்டு வாங்கி வைத்திருந்த புவனேஸ்வரி, ஆதரவற்றவர்களின் நிலையைப் பார்த்து மனமிரங்கி அவர்களுக்கு லட்டு வழங்க முடிவு செய்தார். அதன்படி, அவர்களுக்கு லட்டு கொடுப்பதற்காகக் குனிந்துள்ளார்.

பெப்பர் ஸ்பிரே அடித்து 3 சவரன் செயின் பறிக்க முயற்சி!

அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெப்பர் ஸ்பிரேவை எடுத்து புவனேஸ்வரியின் முகத்தில் அடித்துள்ளார். இதனால் கண்களில் கடுமையான எரிச்சல் ஏற்பட்டு புவனேஸ்வரி துடித்துள்ளார்.

இதனைப் பயன்படுத்திக் கொண்ட அந்த நபர், அவரது கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் தங்கச் செயினைப் பறிக்க முயன்றுள்ளார். ஆனால், கண்களில் எரிச்சல் ஏற்பட்ட நிலையிலும் சுதாரித்துக் கொண்ட புவனேஸ்வரி உடனடியாகக் கூச்சலிட்டுள்ளார்.

அவரது அலறல் சத்தத்தைக் கேட்ட அங்கிருந்த ஆதரவற்றவர்கள் மற்றும் பொதுமக்கள் விரைந்து வந்து செயின் பறிக்க முயன்ற நபரைச் சுற்றி வளைத்துப் பிடித்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் வந்த தாம்பரம் காவல்துறையினரிடம் அவரை ஒப்படைத்தனர்.

பிடிபட்டவர் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்த குப்புசாமி!

இதையடுத்து, பிடிபட்ட நபரை தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அதில், அவர் குப்புசாமி (46) என்பது தெரியவந்தது.

பல்லாவரம் அடுத்த பம்மல் பகுதியில் சொந்த வீட்டில் வசித்து வந்த குப்புசாமி, பி.காம். படித்தவர். இவர் ஓ.எம்.ஆர். பகுதியில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார்.

இதற்கிடையே, ஆன்லைன் டிரேடிங்கில் ஆர்வம் கொண்ட குப்புசாமி, அதில் பல லட்சம் ரூபாயை முதலீடு செய்து இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவருக்குப் பல்வேறு கடன்கள் ஏற்பட்டுள்ளன.

கடன் கொடுத்தவர்கள் தொடர்ந்து பணத்தைத் திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால், பம்மலில் இருந்த தனது சொந்த வீட்டை சுமார் ரூ.60 லட்சத்திற்கு விற்றுக் கடனை அடைக்க முடிவு செய்துள்ளார்.

ரூ.60 லட்சம் வீட்டை விற்றும் தீராத கடன் தொல்லை!

ஆனால், வீட்டை விற்றுக் கிடைத்த பணத்தை கடனை அடைப்பதற்குப் பயன்படுத்தாமல், மீண்டும் ஆன்லைன் டிரேடிங்கில் முதலீடு செய்ததாகவும், அந்தப் பணத்தையும் முழுமையாக இழந்துவிட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, பம்மலில் இருந்து மேல்மருவத்தூருக்குச் சென்று தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இருப்பினும், கடன் கொடுத்தவர்களின் நெருக்கடி தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கடன் தொல்லையிலிருந்து தப்பிக்க வழி தெரியாமல் தவித்த குப்புசாமி, செயின் பறிப்பில் ஈடுபட்டு அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு கடனை அடைக்கத் திட்டமிட்டதாகத் தெரிகிறது.

முதல் முயற்சியிலேயே சிக்க வைத்த ஆதரவற்றவர்கள்!

சம்பவத்தன்று ஓ.எம்.ஆர். பகுதியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியை முடித்துவிட்டு வீட்டிற்குச் செல்வதற்காகச் சானடோரியம் பகுதிக்கு வந்த குப்புசாமி, கடன் நெருக்கடி காரணமாகச் செயின் பறிப்பில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக முதல்முறையாகப் பெப்பர் ஸ்பிரே ஒன்றை வாங்கி வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, நடைமேம்பாலத்தில் சென்ற புவனேஸ்வரியிடம் செயின் பறிக்க முயன்றபோது, அவர் லட்டு வழங்கிய ஆதரவற்றவர்களிடமே வசமாகச் சிக்கிக் கொண்டார்.

சிறையில் அடைத்த போலீசார்!

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த தாம்பரம் குற்றப்பிரிவு போலீசார், குப்புசாமியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தினர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

முதல் மாத சம்பளத்தில் வாங்கிய லட்டுவை ஆதரவற்றவர்களுக்கு வழங்கிய இளம்பெண்ணிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் தாம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதேவேளையில், தங்களுக்கு லட்டு வழங்கிய பெண்ணுக்கு ஆபத்து ஏற்பட்டபோது உடனடியாக உதவி செய்து செயின் பறிப்பு முயற்சியைத் தடுத்து நிறுத்திய ஆதரவற்றவர்களின் மனிதநேயமும் துணிச்சலும் பலரது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற பெண் அதிகாரி வீட்டில் 54 சவரன் நகை, ரூ.15.46 லட்சம் கொள்ளை – 15 ஆண்டுகளாக வேலை செய்த பணிப்பெண் கைது!

MUST READ