Homeசெய்திகள்க்ரைம்மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற பெண் அதிகாரி வீட்டில் 54 சவரன் நகை, ரூ.15.46 லட்சம் கொள்ளை –...

மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற பெண் அதிகாரி வீட்டில் 54 சவரன் நகை, ரூ.15.46 லட்சம் கொள்ளை – 15 ஆண்டுகளாக வேலை செய்த பணிப்பெண் கைது!

-

- Advertisement -

சென்னை மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற பெண் அரசு அதிகாரியின் வீட்டில் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15.46 லட்சம் ரொக்கம் திருடப்பட்ட சம்பவத்தில், கடந்த 15 ஆண்டுகளாக வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.மயிலாப்பூரில் ஓய்வுபெற்ற பெண் அதிகாரி வீட்டில் 54 சவரன் நகை, ரூ.15.46 லட்சம் கொள்ளை – 15 ஆண்டுகளாக வேலை செய்த பணிப்பெண் கைது!

புகார் அளிக்கப்பட்ட ஒரு மணி நேரத்திற்குள் திருடப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர்.

we-r-hiring

சென்னை மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பத்மா (85). ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரியான இவரது கணவர் வெங்கடகோபால் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார்.

தற்போது தனது மகள் சுஜாதா (53) உடன் வசித்து வருகிறார். சுஜாதாவும் வங்கியில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் ஆவார்.

இவர்களது வீட்டில் மந்தைவெளியைச் சேர்ந்த மணிமேகலை (53) என்பவர் கடந்த 15 ஆண்டுகளாகப் பணிப்பெண்ணாக வேலை செய்து வந்துள்ளார்.

நீண்டகாலமாக வீட்டில் பணியாற்றி வந்ததால் அவர் மீது பத்மா மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததாகவும், வீட்டின் அனைத்து அறைகளுக்கும் செல்ல அனுமதித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் வைக்கப்பட்டிருந்த டிரங்க் பெட்டி திடீரென காணாமல் போனது.

அந்தப் பெட்டியில் 54 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ.15.46 லட்சம் ரொக்கம் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பத்மா, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் மயிலாப்பூர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடம் மற்றும் சுற்றுப்புறங்களில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது, வீட்டில் பணிபுரிந்து வந்த மணிமேகலை டிரங்க் பெட்டியைத் தூக்கிச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, மந்தைவெளியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்ற ஆய்வாளர் ரவி தலைமையிலான போலீசார் மணிமேகலையைக் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட 54 சவரன் நகைகள் மற்றும் ரூ.15.46 லட்சம் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.

புகார் அளிக்கப்பட்ட சுமார் ஒரு மணி நேரத்திற்குள் நகை, பணம் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடன் நெருக்கடியால் திருடியதாக வாக்குமூலம்!

போலீசார் நடத்திய விசாரணையில், குடிசை மாற்று வாரியக் குடியிருப்பு ஒதுக்கீடு பெற்றதற்காகவும், கணவரின் மருத்துவச் செலவு மற்றும் குடும்பச் செலவுகளுக்காகவும் மொத்தம் ரூ.24 லட்சம் கடன் வாங்கியிருந்ததாக மணிமேகலை தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கடன் கொடுத்தவர்கள் பணத்தைத் திரும்பக் கேட்டு தொடர்ந்து நெருக்கடி கொடுத்ததால், வேறு வழியின்றி இந்தத் திருட்டில் ஈடுபட்டதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், பத்மா மற்றும் அவரது மகள் இருவரும் வயதானவர்கள் என்பதாலும், வீட்டிற்கு உறவினர்கள் அதிகம் வந்து செல்லாததாலும், நகைகள் மற்றும் பணம் வைக்கப்பட்டிருந்த அறையைப் பூட்டி வைக்காததாலும், டிரங்க் பெட்டியை எளிதில் எடுத்துச் சென்றுவிடலாம் எனத் திட்டமிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

15 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் வீட்டில் வேலை செய்து வந்த பணிப்பெண்ணே நகை, பணத்தைத் திருடியதாகக் கூறப்படும் சம்பவம் மயிலாப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மணிமேகலையிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூரில் ஓய்வு பெற்ற ஆசிரியர் வீட்டில் 160 சவரன் நகைகள் கொள்ளை – ரூ.1 கோடி மதிப்பு!

MUST READ