Homeசெய்திகள்க்ரைம்சினிமா பட பாணியில் ரூ.1 கோடி மதிப்பிலான 46 கிலோ வெள்ளிக் கொள்ளை! முதலாளியாக ஆசைப்பட்ட...

சினிமா பட பாணியில் ரூ.1 கோடி மதிப்பிலான 46 கிலோ வெள்ளிக் கொள்ளை! முதலாளியாக ஆசைப்பட்ட ‘குருவி’ – 6 பேர் கைது, மேலும் 5 பேருக்கு வலை!

-

- Advertisement -

தீபாவளி பண்டிகை நாளன்றுகூட போலீசாரை ஓய்வெடுக்க விடாமல், பெருங்களத்தூர் பேருந்து நிலையம் அருகே பட்டப்பகலில் சினிமா பட பாணியில் அரங்கேறிய ரூ.1 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 46 கிலோ வெள்ளிப் பொருட்கள் கொள்ளைச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

வெள்ளிப் பொருட்களைக் கொண்டு செல்லும் வேலையில் குருவியாகச் செயல்பட்டு வந்த நபர், முதலாளியாக வேண்டும் என்ற ஆசையில் நண்பர்களுடன் சேர்ந்து இந்தக் கொள்ளைத் திட்டத்தை அரங்கேற்றியதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், மேலும் 5 பேரைத் தேடி வருகின்றனர்.

பேருந்தில் இறங்கிய நபரை வெட்டிவிட்டு வெள்ளிக் கொள்ளை!

கடந்த 08.11.2026 அன்று இரவு 7.30 மணியளவில், திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்த பேருந்தில் முகமது ஹுசைன் (26) என்பவர் 46 கிலோ வெள்ளிப் பொருட்களை இரண்டு பைகளில் எடுத்துக்கொண்டு பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் இறங்கினார்.

அப்போது அங்கு திடீரென வந்த 10 பேர் கொண்ட கும்பல், அவரை வழிமறித்து வெள்ளிப் பொருட்களை ஒப்படைக்கும்படி மிரட்டியுள்ளது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அந்தக் கும்பல் சரமாரியாகத் தாக்கியதுடன், மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியால் அவரது தலையில் வெட்டியுள்ளது.

இதில் நிலைகுலைந்து மயக்கமடைந்த முகமது ஹுசைனிடம் இருந்த வெள்ளிப் பொருட்களை, தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களில் எடுத்துக்கொண்டு கொள்ளைக் கும்பல் தப்பிச் சென்றது.

ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமது ஹுசைன்!

இந்தச் சம்பவத்தைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாகப் பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், ரத்த வெள்ளத்தில் கிடந்த முகமது ஹுசைனை மீட்டு தாம்பரம் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு, தலையில் ஏற்பட்ட காயத்திற்கு 6 தையல்கள் போடப்பட்டன.

இதுகுறித்து பீர்க்கன்காரணை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். கொள்ளையடிக்கப்பட்ட வெள்ளிப் பொருட்களின் மதிப்பு ரூ.1 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்பதால், குற்றவாளிகளைப் பிடிக்க தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

சிசிடிவி காட்சிகள் மூலம் துப்பு துலக்கிய போலீசார்!

இதனைத் தொடர்ந்து, சம்பவம் நடைபெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், மருத்துவமனைக்குச் சென்று முகமது ஹுசைனிடமும் விசாரணை நடத்தினர்.

அப்போது, மன்ஷா (25) மற்றும் பர்கான் ஆகிய இருவரும் திருச்சியில் இருந்து வெள்ளிப் பொருட்களைக் கொண்டு வந்து, விமான நிலையத்தில் தன்னிடம் கொடுத்து, கோயம்பேட்டில் ஒப்படைக்கும்படி கூறியதாக முகமது ஹுசைன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வெள்ளிப் பொருட்களை அவரிடம் ஒப்படைத்த இருவரையும் விசாரிப்பதற்காகத் தனிப்படை போலீசார் கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டைக்குச் சென்றனர்.

முதலில் பர்கானிடம் விசாரணை நடத்தி அவரது செல்போனை ஆய்வு செய்தபோது, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் அவருக்குத் தொடர்பு இல்லை என்பது தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து மன்ஷாவிடம் விசாரணை நடத்தியபோது, முதலில் தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறி வந்துள்ளார். ஆனால், போலீசாரின் தீவிர விசாரணையில் கொள்ளைக்கான பின்னணி வெளிச்சத்திற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

குருவியாகச் செயல்பட்டவர் முதலாளியாக ஆசைப்பட்டதால் நடந்த கொள்ளை!

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்குக் கொண்டுவரப்படும் வெள்ளிப் பொருட்களை, குறிப்பிட்ட நபர்களிடம் ஒப்படைக்கும் வேலையைத் தானும் தனது நண்பர்களும் செய்து வந்ததாக மன்ஷா வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அந்த வெள்ளிப் பொருட்கள் மும்பையில் உள்ள பிரபல நகைக்கடை முதலாளிக்கு அனுப்பப்பட்டு வந்ததாகவும், மலேசியாவில் இருந்து திருச்சிக்குக் கொண்டு வருவது மட்டுமே தனது வேலையாக இருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

திருச்சி, சென்னை, கோயம்புத்தூர் விமான நிலையங்களில் கடுமையான சோதனைகள் நடைபெறுவதால், வெள்ளிப் பொருட்களைக் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் இருந்ததாகவும், குறிப்பாக திருச்சியில் சுங்கத்துறை சோதனைகளைத் தாண்டி அவற்றைக் கொண்டு வருவதில் தாங்கள் பழகியிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் இருந்து பேருந்து மூலம் கோயம்பேட்டிற்கு வெள்ளிப் பொருட்கள் அனுப்பப்பட்டு, அங்கிருந்து பார்சல் மூலம் சென்னையிலிருந்து மும்பைக்கு விமானத்தில் அனுப்பப்படுவது வழக்கமாக இருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலாளியாக வேண்டும் என்ற ஆசை – உருவான கொள்ளைத் திட்டம்!

இதுகுறித்து மன்ஷா அளித்ததாகக் கூறப்படும் வாக்குமூலத்தில், “எப்போதும் வேலைக்காரனாக எவ்வளவு நாட்கள்தான் இப்படிப் பொருட்களைக் கொண்டு வந்து கொடுப்பது? அவர்கள் முதலாளிகளாக இருக்கிறார்கள். நாமும் முதலாளியாக வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. ஒட்டுமொத்த வெள்ளிப் பொருட்களையும் நாமே எடுத்துக்கொண்டு, அவற்றை விற்று பணத்தைப் பிரித்துக்கொள்ளலாம் எனத் திட்டமிட்டோம்.

இந்தத் திட்டத்தை முதலில் திருச்சியில் செயல்படுத்த முயன்றோம். ஆனால் அது சரியாக நிறைவேறவில்லை. இதனால் பெருங்களத்தூரில் கொள்ளையை அரங்கேற்றினோம்” எனத் தெரிவித்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

11 பேருடன் திட்டம் – 6 பேர் கைது!

இந்தக் கொள்ளைத் திட்டத்தைச் செயல்படுத்த கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையைச் சேர்ந்த தனது நண்பர்களான இஸ்மாயில் (30), ரிஸ்வான் அலி (26), சாதிக் பாஷா (31), சமீர் அலி (34), லாரன்ஸ் (28) உள்ளிட்ட 11 பேரை இணைத்துக்கொண்டதாகவும், கொள்ளையில் கிடைக்கும் பணத்தில் ஒவ்வொருவருக்கும் ரூ.10 லட்சம் வரை பிரித்துக் கொடுக்கத் திட்டமிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

46 கிலோ வெள்ளி, 2 கார்கள் பறிமுதல்!

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட 46 கிலோ வெள்ளிப் பொருட்கள், இரண்டு கார்கள், ஒரு இருசக்கர வாகனம் மற்றும் இரண்டு பட்டாக்கத்திகள் ஆகியவற்றைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும், இந்தக் கொள்ளைச் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகக் கூறப்படும் எஞ்சிய 5 பேரைப் பிடிக்கத் தனிப்படை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

ஒரு குருவியாகச் செயல்பட்டு வந்த நபர், முதலாளியாக வேண்டும் என்ற ஆசையில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வெள்ளிப் பொருட்களைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு, இறுதியில் போலீசாரிடம் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து புகுந்த முகமூடி கொள்ளையர்கள் – தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து 19 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் கொள்ளை!

MUST READ