பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாகக் கூறி நூதன முறையில் ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்து 440 பணத்தை ஆன்லைன் மூலம் அபகரித்த வழக்கில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞரை சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரீமியம் கிரெடிட் கார்டு ஆசை காட்டி வலைவீச்சு*

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வரும் கீர்த்திவாசன் என்பவரை கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி மர்ம நபர் ஒருவர் செல்போனில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, கீர்த்திவாசனின் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் அவருக்கு பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்க இருப்பதாகவும், அதில் பல்வேறு சிறப்புச் சலுகைகள் கிடைக்கும் என்றும் கூறி நம்ப வைத்துள்ளார்.
தொடர்ந்து, வாட்ஸ்அப் மூலம் ஒரு இணையதள இணைப்பை (Link) அனுப்பிய அந்த நபர், அதில் வங்கிக் கணக்கு உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்தால் விரைவில் பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய கீர்த்திவாசன், அந்த இணைப்பைத் திறந்து தனது வங்கிக் கணக்கு மற்றும் பிற தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்துள்ளார்.
புதிய செல்போனில் சிம் கார்டைப் பொருத்தச் சொல்லி மோசடி
இதன் தொடர்ச்சியாக, மறுநாள் அந்த மர்ம நபர் கீர்த்திவாசனுக்கு ஒரு புதிய செல்போனை அனுப்பியுள்ளார்.
இரண்டு அடுக்கு சரிபார்ப்பு (Two-Step Verification) நடைமுறைக்காக அந்த செல்போனில் தனது சிம் கார்டைப் பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அந்த நபர் கூறியபடி புதிய செல்போனில் தனது சிம் கார்டைப் பொருத்திய சிறிது நேரத்திலேயே கீர்த்திவாசனின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ.10 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், அவரது கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ரூ.7 லட்சத்து 60 ஆயிரத்து 440 மதிப்பிலான ஆன்லைன் பரிவர்த்தனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் மூலம் மொத்தம் ரூ.17 லட்சத்து 60 ஆயிரத்து 440 பணம் அபகரிக்கப்பட்டதை அறிந்த கீர்த்திவாசன் அதிர்ச்சியடைந்துள்ளார்.
சைபர் கிரைம் போலீசில் புகார் – தீவிர விசாரணை
தன்னிடம் பண மோசடியில் ஈடுபட்ட நபரைக் கண்டுபிடித்து, இழந்த பணத்தை மீட்டுத் தருமாறு கீர்த்திவாசன் தேசிய சைபர் கிரைம் புகார் இணையதளத்தில் புகார் பதிவு செய்துள்ளார். தொடர்ந்து, சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் காவல் நிலையத்திலும் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் செல்போன் எண்களை அடிப்படையாகக் கொண்டு மேற்கொண்ட விசாரணையில், இந்த மோசடியில் தொடர்புடைய நபர் மேற்கு வங்காளத்தில் பதுங்கியிருப்பது தெரியவந்தது.
மேற்கு வங்கத்தில் அபுல் உசேன் ஷேக் கைது
இதனைத் தொடர்ந்து, சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் தனிப்படை அமைத்து மேற்கு வங்காளத்திற்குச் சென்றனர். அங்குள்ள காவல்துறையினரின் உதவியுடன் கண்காணிப்பு மேற்கொண்டு, மோசடி வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த அபுல் உசேன் ஷேக் (26) என்பவரை கடந்த நவம்பர் 6ஆம் தேதி கைது செய்தனர்.
பின்னர் அவர் முர்ஷிதாபாத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, உரிய சட்ட நடைமுறைகளுக்குப் பிறகு சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் விசாரணை மேற்கொண்ட பின்னர், சைதாப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவின்படி அபுல் உசேன் ஷேக் சிறையில் அடைக்கப்பட்டார். பிரீமியம் கிரெடிட் கார்டு வழங்குவதாகக் கூறி நடைபெற்ற இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பெருங்களத்தூரில் 55 கிலோ வெள்ளிக்கட்டிகள் கொள்ளை – மர்ம கும்பலுக்குப் போலீசார் வலைவீச்சு!
