விழுப்புரம் ஆசிரியர் நகர் பகுதியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த ஐந்து பேர் கொண்ட முகமூடி கொள்ளைக் கும்பல், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி 19 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடப்பாரையால் கதவை உடைத்து உள்ளே புகுந்த கும்பல்
விழுப்புரம் ஆசிரியர் நகரில் வசித்து வருபவர் ஜானி. இவர் மருந்து விற்பனைப் பிரதிநிதியாகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஹேமா. இவர்கள் வழக்கம்போல் இரவு வீட்டின் கதவுகளை உள்புறமாகத் தாழிட்டுக் கொண்டு குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட முகமூடி அணிந்த கொள்ளைக் கும்பல், வீட்டின் முன்பக்கக் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே புகுந்துள்ளது.
தடுக்க முயன்ற தம்பதியரின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டல்
வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த நகைகளை எடுத்துக் கொண்டிருந்தனர். சத்தம் கேட்டு கண் விழித்த ஜானியும் அவரது மனைவி ஹேமாவும் கொள்ளையர்களைப் பிடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது கொள்ளையர்கள் இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி, ஹேமா அணிந்திருந்த 5 பவுன் தாலிச் செயின் உள்ளிட்ட நகைகளைக் கழற்றிச் சென்றுள்ளனர்.
மேலும், பீரோவில் இருந்த 14 பவுன் தங்க நகைகளையும், ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தையும் கொள்ளையடித்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். மொத்தம் 19 பவுன் நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
அருகிலுள்ள மற்றொரு வீட்டிலும் கொள்ளை முயற்சி
இதே கொள்ளைக் கும்பல் அருகில் வசிக்கும் துரை மற்றும் லதா ஆகியோரின் வீட்டிலும் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், அந்த வீட்டில் கொள்ளையடிப்பதற்கு எதுவும் கிடைக்காததால் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் விசாரணை
சம்பவம் குறித்து தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பலைப் பிடிக்க போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடரும் கொள்ளைச் சம்பவங்கள் – பொதுமக்கள் அச்சம்
விழுப்புரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரசு ஊழியர் நகரில் கடந்த வாரம் ஒரே பகுதியில் ஐந்து வீடுகளில் கொள்ளை மற்றும் கொள்ளை முயற்சி சம்பவங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
அந்தச் சம்பவங்களில் இதுவரை குற்றவாளிகள் பிடிபடாத நிலையில், தற்போது மீண்டும் அதே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நள்ளிரவில் வீட்டின் கதவை உடைத்து, தம்பதியரின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்தடுத்து நடைபெறும் கொள்ளைச் சம்பவங்களுக்குத் தீர்வு கண்டு, இரவு நேரக் காவல் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
