Homeசெய்திகள்க்ரைம்மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: தந்தை, காதலி கைது… 5 கிலோ தங்க நகைகள் மீட்பு!

மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை: தந்தை, காதலி கைது… 5 கிலோ தங்க நகைகள் மீட்பு!

-

- Advertisement -

மதுரை பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பிரபல தனிஷ்க் நகைக்கடையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய நபரான நிஷாந்தை கைது செய்ய காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

கொள்ளைச் சம்பவம் தொடர்பாக அவரது தந்தை மற்றும் காதலி ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது 4-வது நாளாக 9 தனிப்படைகள் பல்வேறு மாநிலங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன.

தந்தையும் காதலியும் கைது:

மதுரை பழங்காநத்தம் அருட்பெருஞ்ஜோதி தெருவைச் சேர்ந்த நிஷாந்த் என்பவர் இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் முக்கிய நபராகச் செயல்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகளைப் பதுக்கி வைத்திருந்ததாகக் கூறி நிஷாந்தின் தந்தை சுரேஷ் மற்றும் அவரது காதலியும், சமூக வலைதளப் பிரபலமுமான மீனாட்சி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவு:

இந்த வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் நிஷாந்த் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். அவரைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நிஷாந்த் பயன்படுத்திய செல்போன் தொடர்பான தகவல்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர் தொடர்ந்து இடம் மாறி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவரைக் கைது செய்வதில் சவால்கள் ஏற்பட்டுள்ளன.

நிஷாந்தைப் பிடிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள 9 தனிப்படைகள் மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.

குறிப்பாக சேலம், கோவை உள்ளிட்ட பகுதிகளிலும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகாவின் பெங்களூரு, தெலங்கானாவின் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலும் போலீசார் விசாரணையை விரிவுபடுத்தியுள்ளனர்.

நிஷாந்தின் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எத்தனை கிலோ தங்கம் கொள்ளை?:

இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் இதுவரை 5 கிலோவுக்கும் அதிகமான தங்க நகைகள் மட்டுமே மீட்கப்பட்டுள்ளன. நகைக்கடையில் இருந்து மொத்தம் எவ்வளவு தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

அவற்றில் எவ்வளவு நகைகள் வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

முக்கிய நபரான நிஷாந்த் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டால், கொள்ளைச் சம்பவத்தின் முழுப் பின்னணி, நகைகள் பதுக்கப்பட்ட இடங்கள், வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவாரா?:

நிஷாந்தின் இருப்பிடம் குறித்த முக்கியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும், அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைத் தனிப்படை போலீசார் தீவிரப்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தந்தை மற்றும் காதலி ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், முக்கிய நபரான நிஷாந்த் தொடர்ந்து தலைமறைவாக இருப்பது வழக்கின் விசாரணையில் முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது.

ஒரு பக்கம் மீட்கப்பட்ட நகைகள், மறுபக்கம் தலைமறைவாக உள்ள முக்கிய நபர் என மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

நிஷாந்த் கைது செய்யப்பட்ட பிறகே இந்தக் கொள்ளையின் முழுமையான பின்னணி தெரியவரும் என்பதால் காவல்துறையினரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் மேலும் நகைகள் மீட்பு – புதைத்து வைத்த இடத்திற்கு இன்ஸ்டா இன்ஃப்ளுயன்சர் மீனாட்சியை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை!

MUST READ