Homeசெய்திகள்அரசியல்ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் குமரி மக்களுக்கு மாபெரும் துரோகம்" – தவெக அரசை டிடிவி...

ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் குமரி மக்களுக்கு மாபெரும் துரோகம்” – தவெக அரசை டிடிவி தினகரன் கடுமையாக சாடல்

-

- Advertisement -

கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க, மக்களின் எதிர்ப்பையும் மீறி கால அவகாசத்தை நீட்டித்து தவெக அரசு அரசாணை பிறப்பித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது” என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அமமுக) பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சாடியுள்ளார். ​அவர் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பரபரப்பு அறிக்கை பின்வருமாறு:

டிடிவி தினகரன்

we-r-hiring

​அவசர அவசரமாக நீட்டிக்கப்பட்ட கால அவகாசம்
​”கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூரில் அணுக்கனிம சுரங்கம் அமைக்க ஐ.ஆர்.இ.எல் (IREL) நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான கால அவகாசத்தை, மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழ்நாடு அரசின் இயற்கை வளங்கள் துறை அரசாணை பிறப்பித்திருப்பதாக ஊடகங்கள் மற்றும் நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிள்ளியூர் தாலுகாவிற்கு உட்பட்ட கீழ்மிடாலம், மிடாலம், இனயம், ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களை உள்ளடக்கிய பகுதிகளில் 1,144 ஹெக்டேர் பரப்பளவில் இத்திட்டம் அமையவிருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலும் பாதிப்படைந்து, மக்களுக்குப் புற்றுநோய் உள்ளிட்ட கொடிய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும், இயற்கை வளங்கள் அழிக்கப்படுவதால் மக்களின் வாழ்வாதாரமும் முற்றிலுமாகப் பாதிக்கப்படும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
​இத்தகைய சூழலில், நில ஒதுக்கீட்டு அனுமதிக்கான அவகாசம் முடிவடையும் அதே நாளில், மக்களின் நியாயமான எதிர்ப்பிற்குச் சற்றும் செவிசாய்க்காமல் அதனை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து தவெக அரசு பிறப்பித்திருக்கும் அரசாணை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தவெக-வின் 50 நாள் ஆட்சியில் மாபெரும் துரோகம்!
​கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தனது கட்சியின் செயற்குழு கூட்டத்தில், இதே திட்டத்தைச் சுட்டிக்காட்டி ‘நாசகார, நச்சுத் திட்டங்களைக் கைவிட வேண்டும்’ எனத் தீர்மானம் நிறைவேற்றியது தமிழக வெற்றிக் கழகம். ஆனால், தற்பொழுது அதிகாரம் கைக்கு வந்து, ஆட்சிப் பொறுப்பேற்ற வெறும் 50 நாட்களில் அதே நச்சுத் திட்டத்திற்கு ஆதரவான நிலைப்பாட்டை தவெக அரசு எடுத்திருப்பது கன்னியாகுமரி மக்களுக்கு இழைக்கும் மாபெரும் துரோகம் ஆகும். இதன் மூலம் தவெக அரசு மக்களுக்கான அரசு அல்ல என்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

​அரசாணையை உடனே திரும்பப் பெறுக!
​எனவே, கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கம் அமைக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பேராபத்துகளையும், அப்பகுதி மக்களின் உடல்நலன் மற்றும் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, நில ஒதுக்கீட்டு ஆணையை மேலும் ஓராண்டிற்கு நீட்டிக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையைத் தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.”
​இவ்வாறு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தவெக அரசுக்குக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளார்.

MUST READ