பிறவியிலேயே இடது கண் இல்லாமல், முகம் விகாரமாக மாறும் நிலையில் இருந்த 9 வயதுச் சிறுமிக்கு, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ‘கண்குழி சீரமைப்பு மற்றும் செயற்கை கண்’ பொருத்தும் அதிநவீன அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக, வெற்றிகரமாகச் செய்யப்பட்டுள்ளது. இச்சாதனை அறுவை சிகிச்சை குறித்த நெகிழ்ச்சியான விவரம் வருமாறு:

பிறவிக்குறைபாட்டால் தவித்த சிறுமி
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்தவர் பொண்ணு, இவரது மனைவி பாலா. இவர்களது 9 வயது மகள் முத்துச்செல்வி. இச்சிறுமிக்கு பிறவியிலேயே இடது கண் இல்லாமல், அந்த இடம் முற்றிலுமாகத் தோலால் மூடப்பட்டுப் பார்வை இல்லாமல் இருந்துள்ளது. வலது கண் பார்வை மட்டுமே இருந்த நிலையில், வயது கூடக் கூட மூடியிருந்த இடது கண் பகுதியால் சிறுமியின் முக அமைப்பே மாறத் தொடங்கியது. இதனால் அச்சிறுமி பெரும் தாழ்வு மனப்பான்மைக்கு ஆளாகியுள்ளார்.

மருத்துவக் குழுவின் அசாத்திய கூட்டு முயற்சி
மகளின் முக அமைப்பை மீட்க ஏழைப் பெற்றோர் தங்களது குழந்தையைத் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
கண் பிரிவு துணைத் தலைவரும், மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்க திட்ட மேலாளருமான மருத்துவர் ரீட்டா ஹெப்சி ராணி தலைமையில், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் அருணா தேவி, மயக்கவியல் மருத்துவர் ஸ்ரீராம் மற்றும் மருத்துவர்கள் அஜய் சந்தோஷ், டேவிட், ஜெயந்தி, வின்சா, திவ்யா, செவிலியர்கள் சுரேகா, ரத்னா ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் இந்தச் சவாலான சிகிச்சையை மேற்கொண்டனர்.
சிறுமிக்கு முதற்கட்டமாகக் ‘கண்குழி சீரமைப்பு’ (Orbital Reconstruction) பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பிளாஸ்டிக்கிலான ‘செயற்கை கண்’ (Custom Ocular Prosthesis) பொருத்தும் சிகிச்சையும் துல்லியமாக நடத்தி முடிக்கப்பட்டது.
மறைந்த விகாரத் தோற்றம்; தாழ்வு மனப்பான்மை நீங்கியது
இந்த அரிய அறுவை சிகிச்சை மூலம், சிறுமி முத்துச்செல்விக்கு இயற்கையாகவே கண் இருப்பது போன்ற அழகான தோற்றம் கிடைத்துள்ளது. முகத்தில் இருந்த விகாரத் தோற்றம் முற்றிலும் மறைந்ததால், அச்சிறுமி மற்ற குழந்தைகள் போலத் தாழ்வு மனப்பான்மையின்றி மகிழ்ச்சியோடு பழகத் தொடங்கியுள்ளார்.
இலவசமாக இந்த மாபெரும் சிகிச்சையைச் சாத்தியமாக்கிய மருத்துவக் குழுவினரை மருத்துவக் கல்லூரி முதல்வர் எபனேசர் ஜோயல் குமார், துணை முதல்வர் பத்மநாபன் மற்றும் மருத்துவமனை கண்காணிப்பாளர் சைலேஸ் ஜெயமணி ஆகியோர் நேரில் அழைத்து மனதாரப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
“தனியார் மருத்துவமனையில் லட்சக்கணக்கில் செலவாகும்…” – தாய் நெகிழ்ச்சி
வெற்றிகரமான இந்த அறுவை சிகிச்சைக்குப் பின் சிறுமியின் தாய் பாலா கூறுகையில்:
”என் மகளுக்கு இந்தச் சிகிச்சையைத் தனியார் மருத்துவமனையில் செய்திருந்தால் லட்சக்கணக்கில் செலவாகியிருக்கும். எங்களால் அவ்வளவு பணத்திற்கு எங்கே போக முடியும்? ஆனால், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஒரு பைசா கூடச் செலவில்லாமல் முதலமைச்சரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அத்தனை சிறப்பாகச் செய்து கொடுத்துள்ளனர். என் மகளுக்கு மறுவாழ்வு தந்த மருத்துவர்களுக்கும், தமிழக அரசுக்கும் என் வாழ்நாள் முழுவதும் நன்றிக்கடன்பட்டிருக்கிறேன்.” என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
தூத்துக்குடி அரசு மருத்துவமனையின் கண் சிகிச்சை பிரிவில் ஒவ்வொரு மாதமும் 200-க்கும் மேற்பட்ட கண்புரை அறுவை சிகிச்சைகளும், கண் நீர் அழுத்த நோய், மாறுகண் சீரமைப்பு, கருவிழி மாற்று அறுவை சிகிச்சைகளும் தங்கு தடையின்றித் துல்லியமாகச் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
