தமிழகத்தில் உள்ள மனமகிழ் மன்றங்களுக்குள் (Clubs) ஆய்வு என்ற பெயரில் ஆளுங்கட்சியினர், யூடியூபர்கள் மற்றும் சமூக விரோதிகள் நுழைந்து வீடியோ எடுப்பதற்கும், அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழ்நாடு மனமகிழ் மன்ற உரிமையாளர் சங்கத் தலைவர் வீரபாண்டியன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி சரவணன் இந்த உத்தரவை வழங்கியுள்ளார்.

மனுவில் கூறப்பட்டிருந்த புகார்கள்:
மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
“தமிழகம் முழுவதும் அரசிடம் முறையாக அனுமதி பெற்று, ஆண்டுக்குச் சுமார் 11 லட்சம் ரூபாய் உரிமக் கட்டணம் செலுத்தி மனமகிழ் மன்றங்களை நடத்தி வருகிறோம். இங்குள்ள உறுப்பினர்களுக்கு மட்டுமே மதுபானங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. எங்களது செயல்பாடுகளைத் துறை சார்ந்த அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து வருகின்றனர். ஆனால், சமீபகாலமாகச் சில ஆளுங்கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் யூடியூபர்கள் என்ற பெயரில் சிலர் மன்றங்களுக்குள் சட்டவிரோதமாகப் புகுந்து விடுகின்றனர். அங்கு மது அருந்திக் கொண்டிருப்பவர்களை வீடியோ மற்றும் ரீல்ஸ் எடுத்து, சமூக வலைத்தளங்களில் தவறாகச் சித்தரித்துப் பரப்புகின்றனர்.
கடந்த மாதம் விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆளுங்கட்சியினர் ஆய்வு என்ற பெயரில் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டனர். இதனைப் பயன்படுத்தி சில சமூக விரோதக் கும்பல்களும் உள்ளே நுழைந்து, வீடியோவை நீக்க வேண்டுமானால் பணம் தர வேண்டும் என்று உரிமையாளர்களை மிரட்டிப் பணம் பறிக்கின்றனர். இதனால் எங்களது தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் காரசார வாதம்:
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வீரா கதிரவன் ஆஜராகி வாதாடினார். “தற்போதைய ஆட்சியில் பலருக்கும் ரீல்ஸ் மோகம் அதிகரித்துவிட்டது. சமூக வலைத்தளங்களில் லைக்ஸ் வாங்க வேண்டும் என்பதற்காகவே ஆளுங்கட்சியினரும், சில யூடியூபர்களும் இந்த அட்டகாசத்தில் ஈடுபடுகிறார்கள். இதனால் அங்கு வருபவர்களின் தனிமனித சுதந்திரம் மற்றும் தனியுரிமை (Privacy) கடுமையாகப் பாதிக்கப்படுகிறது” என்று வாதிட்டார்.
நீதிபதியின் அதிரடி உத்தரவு:
இருதரப்பு வாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சரவணன் பிறப்பித்த உத்தரவில்:
”மனமகிழ் மன்றங்கள் மற்றும் மது அருந்தும் தனியார் விடுதிகளுக்குள் சட்டப்பூர்வமாகச் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளைத் தவிர, வேறு எந்த ஒரு வெளி நபருக்கும் உள்ளே நுழைய அனுமதி கிடையாது. குறிப்பாக, அங்கு இருப்பவர்களை வீடியோ எடுப்பதற்கும், அதனைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வதற்கும் இடைக்கால தடை விதிக்கப்படுகிறது.” மேலும், இந்த விவகாரம் குறித்து தமிழக அரசு தரப்பில் விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை ஒத்திவைத்தார்.
