Homeசெய்திகள்மாவட்டம்தலைமையாசிரியருக்கு எதிராக அவதூறு போஸ்டர்: பட்டுக்கோட்டையில் பெற்றோர் திடீர் சாலை மறியல்

தலைமையாசிரியருக்கு எதிராக அவதூறு போஸ்டர்: பட்டுக்கோட்டையில் பெற்றோர் திடீர் சாலை மறியல்

-

- Advertisement -

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியருக்கு எதிராக நகர் முழுவதும் ஒட்டப்பட்ட அவதூறு போஸ்டர்களைக் கண்டித்தும், அவருக்கு ஆதரவு தெரிவித்தும் பள்ளி மாணவர்களின் பெற்றோர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பட்டுக்கோட்டை

we-r-hiring

​சர்ச்சையைக் கிளப்பிய போஸ்டர்:
பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் தற்காலிக ஆசிரியர்களுக்குச் சம்பளம் வழங்க வேண்டும் எனக் கூறி, மாணவர்களிடம் பணம் வசூலித்ததாகப் பள்ளி தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்திக்கு எதிராக ‘பெரியார் அம்பேத்கர் மக்கள் கழகம்’ என்ற அமைப்பின் பெயரில் நகரின் பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

பெற்றோர்கள் திரண்டு போராட்டம்:
இந்த போஸ்டர் விவகாரம் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இன்று பள்ளி முகப்பு வாயிலின் அருகே திடீரென ஒன்று திரண்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெற்றோர்கள், சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்திக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராக அவதூறு பரப்புபவர்களைக் கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

போலீஸ் பேச்சுவார்த்தை:
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பட்டுக்கோட்டை நகர காவல் துறையினர், சாலை மறியலில் ஈடுபட்ட பெற்றோர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுக் கலைந்து சென்றனர்.


பெற்றோர்கள் குமுறல்:
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர் தரப்பில் கூறுகையில், “தலைமையாசிரியர் தெட்சிணாமூர்த்தி அவர்கள் இந்தப் பள்ளியின் வளர்ச்சிக்கு பல்வேறு வழிகளில் மிகச் சிறப்பாகப் பணியாற்றி வருகிறார். அவரை இங்கிருந்து மாற்றம் செய்துவிட்டு, இங்குள்ள சில முதுகலை ஆசிரியர்கள் அந்தத் தலைமையாசிரியர் பொறுப்புக்கு வர வேண்டும் என்று திட்டமிடுகிறார்கள். அதற்காகவே, தெட்சிணாமூர்த்தி மீது வேண்டுமென்றே பழிசுமத்தி, போஸ்டர் ஒட்டி கெட்ட பெயரை உண்டாக்கி வருகின்றனர். எங்களுக்குத் தெட்சிணாமூர்த்தி தான் தலைமையாசிரியராக நீடிக்க வேண்டும். அவரை மாற்ற முயன்றால் எங்களது போராட்டம் தொடரும்” என்று எச்சரித்தனர்.

MUST READ