Homeசெய்திகள்மாவட்டம்கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:"பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?" – தவெக...

கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:”பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?” – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!

-

- Advertisement -

மின்வெட்டுப் பிரச்சினையையும் சுட்டிக்காட்டி வேதனை – பதிலளிக்க முடியாமல் திகைத்த சட்டமன்ற உறுப்பினர்கும்மிடிப்பூண்டியில் கிராம சபை கூட்டத்தில் பரபரப்பு:"பயிர் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது ஏன்?" – தவெக எம்.எல்.ஏ.விடம் விவசாயி சரமாரி வாக்குவாதம்!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில், தேர்தல் வாக்குறுதிப்படி பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யாதது குறித்துத் தமிழக வெற்றிக் கழகச் சட்டமன்ற உறுப்பினரிடம் விவசாயி ஒருவர் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

we-r-hiring

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டம் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் இன்று சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த கும்மிடிப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

வாக்குறுதி என்ன ஆச்சு? – விவசாயி ஆவேசம்:
கூட்டத்தில் பொதுமக்கள் தங்களது பகுதி தேவைகள் மற்றும் குறைகளை எடுத்துரைத்துக் கொண்டிருந்தனர். அப்போது, அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் திடீரென எழுந்து, சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமாரிடம் பயிர் கடன் தள்ளுபடி குறித்துச் சரமாரியாகக் கேள்விகளை எழுப்பினார்.

விவசாயி பேசியதாவது:
“தேர்தலுக்கு முன்பாக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு மிகச் சொற்ப அளவிலேயே கடன்களைத் தள்ளுபடி செய்துள்ளீர்கள். இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளோம்.

கடந்த அதிமுக ஆட்சியின் போது பயிர் கடன்கள் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டன. அதேபோல தற்போதும் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தால், நாங்கள் மீண்டும் கடன் உதவி பெற்று அடுத்த போக விவசாயத்தைத் தொடங்கியிருப்போம்.”

தொடர் மின்வெட்டுப் புகார்:
மேலும், அப்பகுதியில் நிலவும் மின்சாரப் பிரச்சினை குறித்துப் பேசிய அவர், “ஒரு நாளைக்குக் குறைந்தது 10 முறைக்கும் மேலாக மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் பயிர்களுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் முழுமையாகத் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பயிர் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்யவும், சீரான மின்சார விநியோகம் வழங்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என எம்.எல்.ஏ.விடம் வலியுறுத்தினார்.

பதிலளிக்க முடியாமல் திகைத்த எம்.எல்.ஏ.:
விவசாயி ஒருவர் கிராம சபை கூட்டத்திலேயே நேரடியாக அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், தவெக எம்.எல்.ஏ. விஜயகுமார் மற்றும் அங்கிருந்த நிர்வாகிகள் செய்வதறியாது திகைத்து அமைதியாக அமர்ந்திருந்தனர். தங்களது நியாயமான கேள்விகளுக்குக் கூட்டத்தில் இருந்தவர்களிடம் இருந்து எவ்வித பதிலும் வராததால், அந்த விவசாயி மிகுந்த விரக்தியுடன் கிராம சபை கூட்டத்திலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.

ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்ட கிராம சபை கூட்டத்திலேயே விவசாயி ஒருவர் நேரடியாகத் தட்டிகேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம், கும்மிடிப்பூண்டி பகுதியில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்:எலந்தகுட்டையில் கிராம சபை கூட்டத்தில் கடும் பரபரப்பு!”ஆட்சிக்கு வந்து 3 மாதங்களாகியும் குடிநீர் இல்லை” – த.வெ.க நிர்வாகிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

MUST READ