Homeசெய்திகள்மாவட்டம்காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை...

காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

-

- Advertisement -

சிந்தாமணி காவல் நிலையக் காவலர்களின் தாக்குதலால் காயமடைந்து தனது கணவர் பரமசிவம் உயிரிழந்ததாகக் கூறி, அவரது மனைவி தாக்கல் செய்த வழக்கில் மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்தும் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.காவல் நிலையத் தாக்குதலில் கணவர் உயிரிழந்ததாகக் கவலை: மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு காலனியைச் சேர்ந்த அய்யம்மாள் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவின் விவரம்:

we-r-hiring

கடந்த ஜூலை 16-ம் தேதி வாகனம் நிறுத்துவது தொடர்பாக அருகில் வசிக்கும் பாலகிருஷ்ணன் மற்றும் மாலதி ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஜூலை 17-ம் தேதி கணவர் பரமசிவம் மூலம் சிந்தாமணி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்நோயாளியாகத் தான் சிகிச்சை பெற்று வந்த நிலையில், புகாரை வாபஸ் பெறுமாறு போலீசார் தொலைபேசியில் மிரட்டியுள்ளனர்.

தொடர்ந்து, ஜூலை 19-ம் தேதி வீட்டுக்கு வந்த போலீசார், பரமசிவத்தை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காவல் ஆய்வாளர் விஜயகுமார், உதவி ஆய்வாளர் ஜெயக்குமார், காவலர் ஆனந்த் உள்ளிட்டோர் பரமசிவத்தை காலணியால் உதைத்தும், தலையிலும் தாக்கியுள்ளனர். இதில் அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். பின்னர், முதலுதவி அளித்துவிட்டு மீண்டும் அழைத்து வந்த போலீசார், இந்தச் சம்பவத்தை வெளியே தெரிவித்தால் மக மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்வதாக மிரட்டியுள்ளனர்.

இதன்பிறகு பரமசிவத்திற்கு கடுமையான தலைவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. பரிசோதனையில் அவரது மூளையில் ரத்தக்கசிவு இருப்பது தெரியவந்தது. தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த 16-ம் தேதி காலை வேலம்மாள் மருத்துவமனையில் உயிரிழந்தார். இதுதொடர்பாக கீழைத்துறை போலீசார் ‘சந்தேக மரணம்’ என வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நீதிமன்றத்தில் வாதங்கள்
இந்த வழக்கு நீதிபதி முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஹாரூன் ரஷீத் வாதிடுகையில்: “காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்ட கணவன்-மனைதியை ஆய்வாளர் மற்றும் காவலர்கள் இணைந்து கால்களால் தலையில் தாக்கியுள்ளனர். இதில் அவர் மயக்கமடைந்து வாந்தி எடுத்துள்ளார். எனவே, இது காவல் நிலையத் தாக்குதல் பிரிவுக்கு உட்பட்டது என்பதால், 3 மூத்த மருத்துவர்கள் கொண்ட குழுவைக் கொண்டு பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் மற்றும் காவல் நிலைய சிசிடிவி காட்சிகளைப் பாதுகாக்க வேண்டும்” என்றார்.

அரசு தரப்பு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வாதிடுகையில்: “மனுதாரரின் கணவர் காவல் நிலையத்தில் இறக்கவில்லை; காவலர்கள் அவரைச் சட்டவிரோத காவலில் எடுக்கவில்லை. சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கமான பிரேத பரிசோதனை முழுமையாக வீடியோ பதிவு செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுகள்
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி முருகன் பிறப்பித்த உத்தரவு விவரம்:

மாஜிஸ்திரேட் விசாரணை: மனுதாரர் காவல் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டுத் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளில் முகாந்திரம் உள்ளதால், இவ்வழக்கு குறித்து மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது.

மூன்று மருத்துவக் குழு உடற்கூறாய்வு: மதுரை, தேனி மற்றும் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் தடய அறிவியல் துறையைச் சேர்ந்த தலா ஒரு மூத்த பேராசிரியர் கொண்ட 3 பேர் குழுவினர் உடற்கூறாய்வு செய்ய வேண்டும். இந்த முழுப் பிரேத பரிசோதனையும் வீடியோ பதிவு செய்யப்பட வேண்டும்.

வழக்கறிஞர் ஆணையர் நியமனம்: சிந்தாமணி காவல் நிலையத்தில் சிசிடிவி கேமராக்கள் உள்ளதா அல்லது அகற்றப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய நீதிமன்ற ஆணையர் ஒருவர் நியமிக்கப்படுகிறார். அவர் நேரில் சென்று ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அங்கு சிசிடிவி பொருத்துவதற்கு அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற விவரங்களையும் சேகரிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

லால்குடியில் புதிய டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் விடிய விடிய சாலை மறியல் – ஸ்தம்பித்த போக்குவரத்து!

MUST READ